ஒரு கேள்விதான் அவன் கேட்டான். அவளுக்குக் குப்பென்று வேர்த்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் துவங்கின. ‘இருடா நாயி.. ஒனக்கு இருக்கு’, என்றபடி பதட்டத்துடன் மினி பஸ்சிலிருந்து இறங்கினாள். கூட்டம் எப்போதும் எக்குத் தப்பாகத்தான் இருக்கும். இரண்டு தடவை அடிக்க வேண்டிய டிரிப்பை ஒரு தடவையாக்கினால் மினி பஸ்சுக்கு லாபம். பெண்களுக்கு கஷ்டம். இடித்துப் பிடித்து, தள்ளி, மிதித்து தள்ளப்பட்டவள் போல, ஜோதி வெளியே வந்தாள். ஏதுமே நடக்காதது போல மினி பஸ் புறப்பட்டுப் போனது.

பஸ்சில் இருந்தவர்களின் பாதிப்பேர் அவள் ஊர்க்காரர்கள்தான். அனைவரின் கண்களிலும் சிரிப்பிருந்ததாக அவளுக்குத் தோன்றியது. யாருமே அவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. பாண்டியன் பஸ் என்றால் அடிதடிக்காரர்கள் என்று பெயர். அதற்காக, ஒரு பெண்ணிற்குப் பரிந்து பேச யாருமேயில்லையா? பாண்டியன் ஊரின் பெரிய மனிதர். பேரூராட்சி சேர்மேன். அதாவது அவரின் மனைவிதான் சேர்மேன். ஓட்டல், மினிபஸ், குவாரி என்று ஊரின் சொத்தெல்லாம் அவர் கையில்தான் இருக்கிறது. எதிர்த்துக் கேட்டால் ஆள் காணாமல் போய்விடுவார்கள்.

'அதனாலென்ன, ஒரு பொம்பளய கண்டக்டரு அப்புடி கேக்கிறானே.. எதிர்த்துக் கேட்க ஒரு பயபுள்ளக்கி துணிச்ச வல்லிய?’, என்று மனதுக்குள் முனகிக்கொண்டே யூனியன் ஆபீசுக்கு நடந்தாள். 100 நாள் வேலையில் 15 நாட்களுக்கு மேலாக சம்பளம் போடவில்லை. அதற்காக ஒரு நடை அங்கே போனாள். அங்கே ஆபீசர் இல்லை. திரும்பி வந்து மினி பஸ் பிடித்தவளைத்தான் அவன் அந்த வார்த்தை கேட்டுவிட்டான்.

ஜோதிதான் அவள் ஊரின் தலைவி. பஞ்சாயத்துத் தலைவியில்லை. விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவி. தினமும் காலையில் வீட்டு வாசலுக்கே பிரச்சனை வரும். வீட்டு வாசலில் இருந்த அடுப்பில் சமைத்துக்கொண்டே பிரச்சனையைக் கேட்பாள். யாருக்கு என்ன சொல்ல வேண்டுமோ சொல்லி அனுப்பிவைப்பாள். அப்புறம் மண்வெட்டி, சட்டியைத் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போவாள். 100 நாள் வேலையில் காலையில் அளந்துவிடுவதிலேயே பிரச்சனை துவங்கும். இவள் போகாவிட்டால் சரிப்பட்டு வராது.

சில நாட்களில் வேலைக்குப் போகாமல் யூனியன் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் என்று போகவேண்டிவரும். பெரும்பாலும் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள்தான் இவளிடம் வருவார்கள். நலத்திட்ட உதவி என்று நாட்டாமையிடம் மனு கொடுக்கும்போதே இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டால், டாண் என்று அடுத்த மாதம் பணம் வரும். அந்தப் பணம் கொடுக்கவில்லையென்றால், ஒரு மனுவைப் பணமாக்க பத்து தடவை நடக்க வேண்டியிருக்கும். அப்புறம் மனுவே காணாமற்போய்விடும். நாட்டாமையிடம் நைச்சியமாகப் பேசி பல்லைக்காட்டி, கெஞ்சி கூத்தாட வேண்டியிருக்கும். ஆனால், ஜோதியிடம் வந்தால் பணமில்லை. அதுமட்டுமல்லாமல் அதிகாரியிடமே அதிகாரம் செய்ய முடியும் என்பதால் அனேகம்பேர் ஜோதியிடம்தான் வருவார்கள்.

ஜோதி யூனியன் ஆபீசுக்கு நடந்தபோது வழியில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் அவள் கண்ணில் பட்டது.

‘அந்த நாயைப் பத்தி புகார் செஞ்சுடலாம்’, என்று எண்ணியபடியே சட்டென்று ரோட்டைக் கடந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள். வராண்டாவில் பெண் எஸ்ஐ இருந்தார். சேர் நிறைய அமர்ந்திருந்தார். பெண்ணிடம் சொன்னால் பிரச்சனை புரியும் என்று நினைத்தவளாக, ‘மேடம்’ என்று அழைத்தாள்.

அந்த அம்மா நிமிர‌வேயில்லை. சில நொடிகள் மௌனமாகப் போனது. எழுதிக்கொண்டிருந்த பேனாவை நிறுத்திவிட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தார்.

‘சொல்லுடி..’ என்றார்.

இவளுக்கு எரிச்சல் வந்தது. இவள் ஊரில் யாரும் இவளை ‘டீ’ போட்டுப் பேசத் துணிய மாட்டார்கள். ‘சரி.. இப்போ அதல்ல முக்கியம்’, என்று நினைத்தபடி மினி பஸ்சில் நடந்ததைச் சொன்னாள்.

‘போடிப் போ.. என்னா கூப்பிட்டானா?.. இல்லியே… அப்புறம், இதுகெல்லாம் புகார் கொடுக்க வந்துட்ட..’, என்றபடி திரும்ப எழுதத் துவங்கினார் எஸ்ஐ அம்மா.

ஜோதி அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தாள். இது கதைக்காகாது என்று தெரிந்தது. வேறு வழியில்லை. ‘இவளுக்கும் ஒரு காட்டு காட்டினாத்தான் தெரியும்’, என்று முடிவு செய்தவளாகக் கட்சி ஆபீசுக்கு நடந்தாள்.

வாழைத்தோட்டத்திற்கு முன்பே மாடியில் கட்சிக் கொடி பறப்பது தெரிந்தது. வெயிலில் ஓட்டமும் நடையுமாக நடந்ததில் அவளுக்கு வியர்த்துக்கொட்டியது. வாய்க்காலில் ஓடி வந்துகொண்டிருந்த பம்பு செட் நீரை எடுத்து முகத்தில் தெளித்துக்கொண்டாள். தலையிலும் கொஞ்சம் ஊற்றிக்கொண்டாள். காலையிருந்து சாப்பிடாத வயிறு எரிந்தது. வேகமாக நடந்து மாடியேறி ஆபீசுக்குள் நுழைந்தாள்.

எதிரே பெரிய தோழர் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி மற்ற தோழர்கள் உட்கார்ந்து காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

‘அய்யோ மாவட்ட கமிட்டி நடக்குதே.. யாரும் இப்போ அசைய மாட்டாங்களே..’, என்று நினைத்தபடியே தயங்கி நின்றாள்.

‘வாங்க ஜோதி தோழர்..’ என்றார் பெரிய தோழர். மற்றவர்கள் இவளைத் திரும்பிப் பாத்தனர். ‘கொஞ்சம் ஒக்காருங்க.. கூட்டம் முடியப்போவுது’, என்றார்.

கூட்டம் நடக்கும்போது யாரையும் உள்ளேயே விடமாட்டார்கள். உட்காரச் சொல்வது மிகப்பெரிய விஷயம். இவள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பொருள்.

உடனே யாரையாவது அழைத்துக்கொண்டு ஸ்டேஷன் போயாக வேண்டும் என்று தோன்றினாலும், ஓரத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டாள். பஸ்சில் நடந்தது திரும்பத் திரும்ப அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ‘அந்தப் பயபுள்ள கால ஒடைக்காம வந்திட்டனே’, என்று வருந்திக்கொண்டாள்.

நிலப்பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் என்று புரிந்தது. தாசில்தார் பெரிய மனுஷங்க கைக்கூலியாக இருந்துகொண்டு புறம்போக்குகளை விட்டுக்கொடுப்பதற்கு எதிராக ஏதோ பேசினார்கள். அவர்கள் பேசியதைக் கேட்க முடியாதபடி அந்த கண்டக்டரின் கேள்வி இவள் மூளைக்குள் குடைந்துகொண்டிருந்தது.

கூட்டம் முடிந்தவுடனேயே, ‘சொல்லுங்க ஜோதி தோழர்’, என்று ஆரம்பித்தார் பெரிய தோழர்.

நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

யூனியன் ஆபீஸ் போய்விட்டு ஆபீசர் இல்லையென்று திரும்பி வந்து மினி பஸ் பிடித்ததையும், பஸ் மந்தையை நெருங்கும்போது அவளை யூனியன் ஆபீசில் இருந்து செல்லில் அழைத்ததையும் சொன்னாள்.

‘ஒரே கூட்டம் தோழர்.. மந்தைய விட்டா அப்புறம் ஸ்கூல்லதான் பஸ் நிக்கும். எறங்கி ஓடிப்போயி ஆபீசர பிடிக்கனும்.. அந்த ஆளு போய்ட்டான்னா.. அப்புறம் வேலைக்காகாது.. அப்புடின்னு நெனச்சி.. பஸ்ச நிறுத்தச் சொன்னேன். அதுக்கு கண்டக்டரு ‘ஏம்மா, எவென் செல்லுல கூப்பிட்டான்னு அவசரமா எறங்குற.. அவசரம்னா.. அவசரமா செஞ்சுட்டு வந்து ஏறியிருக்குறது?’ன்னு கேட்டாந் தோழர்’, என்று சொல்லி முடித்தாள்.

தோழர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று அவளுக்குப் பட்டது. பெரிய தோழர் நெற்றியைச் சுருக்கிகொண்டு யோசித்தார்.

ஜோதி ஆறடிக்கு மேல் வளர்ந்தவள். மாநிறம். சுருட்டை முடி முதுகுக்குக் கீழே இறங்கியிருக்கும். அவள் கணவன் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இரண்டு ஆண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் வாழ்க்கை அவளுடையது.

‘அவனுக்கும் ஒங்களுக்கும் முன்ன பின்ன தகராறு உண்டா?’, என்றார் பெரிய தோழர்.

‘இல்லத் தோழர், பொதுவா அவேன் ஸ்கூலு பிள்ளைங்கல கிண்டல் பண்ணுவான். இன்னிக்கு டிக்கெட் கொடுக்கறப்ப இடிச்சுகிட்டே நின்னான்னு ‘செவுத்ல நாயி ஒராசுற மாதிரி நிக்கிற‘ன்னு கேட்டேன். நாங்கேட்டது தப்பா..தோழர்..? மனசிலய வச்சிருந்து.. நான் எறங்கனும்னு சொன்னப்ப.. அவம்பதிலுக்குக் கேட்ட வார்த்த தப்பில்லியா?’

‘தப்புதான்.. பெண்கள அப்பிடி பேசக்கூடாது.. அதுவும் பொது எடத்துல.. பேசினான்னா அவன சும்மா உடக்கூடாது.. ஸ்டேஷன்ல கம்ளைன்ட் கொடுக்கிறதுதானே?’

‘போனேந் தோழர்.. கண்டுக்க மாட்டங்கிறாங்க’, என்றவள் ‘இந்த மனுஷன் எப்ப என்ன நெனக்கிறார்னு மொகத்தில தெரியவே மாட்டேங்குது’, என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

‘சரி.. முருகேசன் தோழர், பெண்களை இழிவுபடுத்துவது வர்ர மாதிரி ஒரு புகார் எழுதி கொடுங்க.. தோழர் சண்முகம் நீங்க ஜோதியோட ஸ்டேஷன் போங்க.. தோழர் ஜோதியே மனுவக் கொடுக்கட்டும். நீங்க சும்மா கூடப்போங்க.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு’, என்றபடி எழுந்தவர், ‘நீங்க யாருகிட்ட புகார் கொடுத்திங்க?’, என்று இவளைக் கேட்டார்.

‘கொடுக்கலத் தோழர்.. சொன்னேன்.. அந்த குண்டம்மா எஸ்ஐகிட்ட.. ‘போடிப் போ’-ன்னுட்டாங்க’

‘புகாரை எடுக்காட்டா என்னக் கூப்பிடுங்க.. நான் மதுர போறேன்.. அவசர வேலை’, என்று சொன்ன தோழர் மாடியிலிருந்து இறங்கினார்.

முருகேசன் தோழர் எழுதிக்கொடுத்த புகாரை எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் போனபோது அதே எஸ்ஐ அம்மாதான் இருந்தார்கள். இவள் தோழரோடு வருவது தெரிந்தவுடன் எஸ்ஐயின் முகத்தில் எரிச்சல் வந்து அமர்ந்துகொண்டது.

ஜோதி புகாரை நீட்டினாள். எஸ்ஐ, சண்முகம் தோழரை நாற்காலியில் அமரச்சொல்லி கைகாட்டினார். எதுவும் பேசாமல் புகாரை வாங்கிப் படித்தார். புகாரைப் படித்து முடித்துவிட்டு ‘இதுக்கெல்லாம் போயி புகாரு’, என்று எஸ்ஐ முணுமுணுத்தது தோழர் சண்முகத்திற்கும் ஜோதிக்கும் நன்கு கேட்டது.

‘ஏம்மா… ஒரு ஆம்பளய அவேன் அப்புடி கேட்டிருப்பானா? இந்த அம்மா இப்பத்தான் புருஷன பறிகொடுத்தாங்க.. அவங்க கழுத்தப் பாருங்க.. கழுத்தைப் பார்க்காமலா அந்த நாயி அப்புடி பேசிச்சி?..அவம்பேசினதுக்கு என்ன அர்த்தம்?’ சண்முகத்தின் குரல் எடுத்தவுடனே உயர்ந்தது.

எஸ்ஐ செல்லை எடுத்துக்கொண்டு விலகி நடந்தார். யாருடனோ பேசிவிட்டு திரும்பிவந்து, ‘இன்ஸ்பெக்டர் வரார்.. பஸ் கம்பெனிகாரங்கல அவரே வரச்சொல்றாராம்.. கொஞ்ச நேரம் ஒக்காந்திருங்க’, என்றபடி எஸ்ஐ வெளியே சென்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

‘வண்டிய எடுத்துக்கிட்டு எங்க போவுது அந்த அம்மா?’, என்று ஜோதி தோழரிடம் கேட்டாள்.

சண்முகம் சிரித்தார். ‘இன்னிக்கு ஒன்னால ஸ்டேஷனுக்கு நல்ல சம்பாத்தியம் வரப்போவுது’, என்றார்.

ஜோதியும் தோழரும் கொஞ்ச நேரம் காத்திருந்தனர். பஸ் கம்பெனி மானேஜர் செக்கருடன் வந்து சேர்ந்தார். அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்தார். வந்தவுடனேயே அறைக்குள் அழைத்து மேனேஜரிடம் பேசினார். அப்புறம் இவர்களை உள்ளே வரச்சொன்னார். சேரைக் காட்டி உட்காரச் சொன்னார். ஜோதிக்குத் தயக்கம்.. சண்முகம் கண்ணைக் காட்டி உட்கார வைத்தார். அந்தப் பக்கம் பஸ் கம்பெனி மேனேஜரும் செக்கரும், இந்தப் பக்கம் தோழரும் ஜோதியும் என்று உட்கார்ந்திருந்தனர்.

இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார், ‘சண்முகம், அவுங்க தப்புன்னு ஒத்துக்கிறாங்க.. கேசுன்னு போவ வேண்டாம்னு நெனக்கிறாங்க.. மன்னிப்பு கேக்கிறாங்க.. நஷ்ட ஈடுன்னு ஏதாவது கேட்டா..’

சட்டென்று ஜோதியின் குரல் கீச்சுக்குரலாக உயர்ந்தது, ‘என்னா சார் பணம்.. பணம் வரும் போவும்… வுட்ட வார்த்த அவன் வாய்க்குள்ள திரும்பிப் போவுமா சார்?’

இன்ஸ்பெக்டர், ‘போகாதும்மா.. என்ன செய்யனுங்கிற?’ என்றார் எரிச்சலுடன்.

‘நீங்க செய்ய வேண்டாஞ் சார்.. அந்தப் பய பஸ்ல எங்க ஊருக்குள்ளதான வருவான்… அடிச்சி நொறுக்கிடறேன் அந்த நாயையும் பஸ்சையும்.. ஊர் பொம்பளங்க தெரண்டா என்ன ஆகும்னு தெரியுமில்ல?’. ஜோதியின் வெறியைக் கண்டு சண்முகத்திற்கே பயமாக இருந்தது.

அதற்குள் மேனேஜர் குறுக்கிட்டார். ‘இந்தாம்மா.. நீ பாட்ல பேசிக்கிட்டுப் போற? அன்னிக்குக் கடையில வந்து தகராறு செஞ்ச.. இன்னிக்கு கட்டுத்திட்டமில்லாம பேசுற?’.

’என்னாய்யா கட்டுத்திட்டம்.. கட்டுத்திட்டம் ஒங்களுக்கு இல்லியா..? அன்னிக்கு கச்சிக் கூட்டத்துக்கு வந்த பொம்பளங்கல்லாம் மினி பஸ்ச காணோம்னு ஆட்டோ பிடிச்சுப் போனோம்.. மந்தையத் தாண்டுறதுக்குள்ள ஒங்க மொதலாளி ஹோட்டல் கடையாளுங்க பைக்கில வந்து ஆட்டோவ மறிச்சு எறக்கிவிட்டாங்க.. ஒங்க ரூட்ல ஆட்டோ ஓடக்கூடாதா? அதாங் கடைக்கி வந்து எங்கள மறிச்ச ஆள வெரட்டினோம்.. ‘நாங்க பஸ்லயே போறாம்.. நீ பைக்கில போயி எங்க வூட்டுக்குத் தண்ணி புடிச்சி வைய்யிடா’-ன்னு தகராறு செஞ்சொம்.. பஸ் லேட்டா வரும்.. தண்ணி கரெக்டா வரும்னா பொம்பளங்க பாடு என்னாவுறது?’

இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. தகராறு நீளும் என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

சண்முகத்திற்குப் பிரச்சனை தெரிந்த ஒன்றுதான். மினி பஸ் முழுமையும் நிறையும்படி கூட்டம் சேரும் வரை பஸ் வராது. அந்த நேரத்தில் அந்த ரூட்டில் ஆட்டோவும் ஓடக்கூடாது என்பது பாண்டியனின் ராஜ்ய விதி. அதற்கு போன வாரம்தான் அடிகொடுத்திருந்தார்கள் பெண்கள். ஆண்கள் என்றால் அடிதடியாகியிருக்கும். பெண்கள் மேல் கைவைத்தால் பிரச்சனையாகிவிடும் என்று அன்று பிரச்சனை ஓய்ந்தது.

மறுபடியும் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாத மேனேஜர் இறங்கி வந்தார். ‘சரிம்மா.. ஒங்க பொம்பளங்க கூட்டத்த நாங்க ஒன்னும் செய்ய முடியாது.. தப்புத்தான் எங்க ஆளு கேட்டது தப்புத்தான். அவன் கண்டக்டரு.. நான் மேனேஜரு.. நான் மன்னிப்புக் கேக்கிறம்மா.. மேனேஜர்.. கேக்கிறேன்.. உட்டுடு..அவனயும் பஸ்ச உட்டு எறக்கிடுறோம்’

சண்முகம் ஜோதி முகத்தைப் பார்த்தார். ‘வம்பு வழக்கு என்று போவதைக் காட்டிலும் பயத்திலேயே வைத்திருப்பது நல்லது. அலைச்சலும் மிச்சம். பயமும் இருக்கும்’,என்று கணக்குப் போட்டார்.

ஒருவாராக, மேனேஜர் மன்னிப்புக் கேட்டதோடு விட்டுவிடுவது என்று முடிவுக்கு ஜோதி வந்தாள். பஸ் கம்பெனி மேனேஜர் மன்னிப்பு எழுதிக்கொடுக்க இரண்டு தரப்பாரும் கையெழுத்துப் போட்ட பின்னர் ஜோதியும் சண்முகமும் வெளியே வந்தனர்.

‘சரி தோழரே.. நான் யூனியன் ஆபீஸ் வேலையப் பார்க்கப் போறேன்’, என்றாள் ஜோதி.

சண்முகத்துக்கு வியப்பாக இருந்தது. இத்தனை நேரம் பேயாட்டம் ஆடிய ஜோதியா இது?

‘என்ன தோழரே பார்க்குறிங்க?’, ஜோதி கேட்டுவிட்டாள்.

‘இல்ல.. அந்தப் போடு போட்டிங்களே.. இப்ப ஏதும் நடக்காத மாதிரி அடுத்த வேலைக்குப் போறிங்க.. ஒங்கள புரிஞ்சிக்க முடியில தோழர்..’, என்றார் சண்முகம்.

ஜோதி சிரித்தாள்.. ‘தோழரே.. பெரிய தோழர் சொல்ற மாதிரி..’ அவள் குரல் உடைந்தது. சட்டென்று அவள் கண்கள் கலங்கின.. ‘நீங்க பொம்பளயா இருந்து பாருங்க..’, என்றவள், கண்ணைத் துடைத்துக்கொண்டு, விட்ட நேரத்தைப் பிடிக்கப்போவது போல விரைந்தாள்.