கிருஷ்ணமூர்த்தி அந்த டப்பாவைக் கவிழ்த்துக் கொட்டி அதில் அது கிடக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு கிடந்ததாக நினைவு. எதெதிலோ போட்டு வைத்திருந்தோம், காணவில்லையே! கொட்டிய வேகத்தில் ரெண்டு மூன்று பூச்சிகள் விருட்டென்று ஓடின. ஒரு மாதிரி மக்கிய வாடை வந்தது டப்பாவிலிருந்து. விரலால் ஒவ்வொன்றாக விலக்கி, விலக்கி அவர் தேடும் அந்தப் பேன்ட் கிளிப் கண்ணுக்குத் தென்படவேயில்லை. காலங்கார்த்தால இதுக்கு இந்தப் பாடா? இப்பொழுதெல்லாம் சின்னச் சின்ன வேலைகள் கூட மலைப்பாகத் தோன்றுகிறது. வயதானாலே அப்படித்தான் போலும்! உடல் தளர்கிறது. கூடவே மனமும் தளர்கிறது. கனத்த சட்டை போடப் பிடிக்கவில்லை. லேசான துண்டு மட்டும் தோளில் கிடந்தால் போதும்.ராத்திரி அதை நீட்டி விரித்து நெடுஞ்சாண்கிடையாகச் சாய்ந்தால் போதும். அத்தனை ஆசுவாசம் உடலுக்கு வேண்டியிருக்கிறது. எளிமையாய் இருப்பதில்தான் எத்தனை சுகம். வயசு இருக்கும் காலத்தில் இது தெரியாமல் போகிறதே?

கைகள் அளைகின்றன. ஸ்க்ரூக்கள், நட்டுக்கள், சட்டை பட்டன்கள், கோலிக் குண்டுகள், வெண்கலத்தினாலான பகடை, சோழிகள், சுவிட்சுகள், ப்ளக்குகள், வொயர்கள், துருப்பிடித்த குண்டூசிகள், சாவிகள், சின்னச் சின்ன பென்சில்கள், ப்யூஸ் கம்பிச் சுருள், இன்னும் என்னென்னவோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்... அத்தனையும் அவர் சேமிப்பு. எப்பொழுதாவது பயன்படும் என்று போட்டு வைத்தது. அவ்வாறு எதையும் வீணாக்காமல், தூர எறியாமல் எதற்கும் கிடக்கட்டுமே என்று வைத்திருப்பது.

சிறு வயது முதலே இந்தப் பழக்கம். எங்கிருந்து தனக்கு இது தொற்றிக் கொண்டது என்றெல்லாம் அவர் நினைத்துப் பார்த்தது இல்லை, வீட்டிலுள்ள பெரியோர்களைப் பார்த்துப் பார்த்து வந்த பழக்கமாயிருக்கலாம். நாலு முழ வேட்டியை கடைசிக் கோவணமாய் பயன்படுத்துவதுவரை உபயோகப்படுத்திய அப்பாவைத்தான் அவர் அடிக்கடி நினைவு கூறுவார். அதென்ன கேவலமா என்ன? ஒரு பொருள் அதன் முழுப் பயன்பாட்டை எய்த வேண்டாமா? கணக்கெழுதும் பொழுது அப்பா தன் மரப் பெட்டியைத் திறக்கையில் உள்ளே பார்த்திருக்கிறார் அவர். அடேயப்பா! காலத்துக்கும் கதை பேசும் அரிதான பொக்கிஷங்கள் அவை. அதிலும் ஒரு ஓலைச் சுவடியும், பெரிய யானைப்பல் ஒன்றும் வைத்திருப்பார் அப்பா. அதுதான் இவர் கவனத்தை விடாமல் ஈர்க்கும். அதை ஒரு நாள் கூடத் தொட அனுமதித்ததில்லை பாட்டி. அப்பா பெட்டியைத் திறந்திருக்கையில் பாட்டி அருகிலேதான் இருந்திருக்கிறாள். கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள் பாட்டி.

“குழந்ததானேம்மா...பார்த்திட்டுப் போகட்டுமே...” என்பார் அப்பா. பாட்டி கேட்டால்தானே? தன்னைத் தவிர பிறர் தொட்டால் அதன் மகத்துவம் குன்றிப் போய்விடுமோ என்னவோ? அவ்வப்போது நூல் பிரிப்பதும், ஏடு ஏடாகப் பிரித்து எதையோ படிப்பதும், பிறகு ஒன்றாகச் சேர்த்து நூல் சுற்றி உள்ளே வைப்பதுமாக.... அப்படி அதில் என்னதான் ரகசியமோ.....அம்மாதான் சொன்னாள் ஒரு நாள். “அதில உங்களோட ஜாதகமெல்லாம் இருக்குடா... தாத்தா எழுதிக் கொடுத்ததாக்கும்...”

ஜாதகம்னா அதில என்னவெல்லாம் இருக்கும்...? ஒரு நாள் எடுத்துப் பிரித்துப் பார்த்தேவிட்டார் இவர். ஒன்றுமே புரியவில்லை. என்ன பாஷையில் அது எழுதப்பட்டிருக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை இவருக்கு. ஏதோ ஒன்றிரண்டு எழுத்துக்கள் தமிழில் இருப்பதாய்த் தோன்றின. இவரை அதிகமாக ஈர்த்தது அந்த யானைப் பல்தான். தேய்ந்து தேய்ந்து போய் இப்பொழுது இருக்கும் இந்த சைஸே இத்தனை பெரிதென்றால், முழுசாக அது எத்தனை பெரியதாக இருந்திருக்கும்? அப்பொழுதெல்லாம் இந்தப் பெட்டிக்குள் அது கொண்டதா? இல்லை அப்பா அதை வேறு எங்கேனும் வைத்திருந்தாரா? வீட்டில் யாருக்கேனும் தலைவலி காய்ச்சல் என்றால் தரையில் உரைத்து, உரைத்து நெற்றியில் பற்றிடுவதை அவர் பார்த்திருக்கிறார். அதெல்லாம் கிடக்கட்டும்...முதலில் பாட்டிக்கு இது எப்படிக் கிடைத்தது? விலைக்கு வாங்கியதா? அல்லது யாரேனும் ஓசி கொடுத்ததா? விலைக்குக் கூட இதெல்லாம் விற்பார்களா? அப்படியென்றால் ஒரு யானை இறந்த பிறகுதானே இதை எடுத்திருக்க முடியும்? அல்லது கொன்ற பிறகு...கொல்லுவது சட்டப்படி குற்றமாயிற்றே...? பாட்டிக்கு யார் இதைக் கொடுத்திருப்பார்கள்?

இந்தப் பல் அந்த யானையின் வாயில் இருந்திருக்கும்போது அது என்னத்தையெல்லாம் கடித்துக் குதறித் தின்று தீர்த்திருக்கும்? அப்பொழுது வாய் என்னமாதிரி நாறியிருக்கும்? யானை சைவம் என்பார்களே? இல்லையென்றால் அப்பாவின் பெட்டிக்கு இது வந்திருக்குமா? அல்லது பாட்டிதான் அதை வைத்திருப்பாளா? வெறுமே செவ்வாய், வெள்ளி என்றாலே தக்காளியைக் கூட சமையலில் ஒதுக்கும் அளவுக்கு ஆச்சாரமான பாட்டி இதை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாள்? இதை முதலில் மருந்துப் பொருள் என்று பாட்டிக்கு யார் காண்பித்துக் கொடுத்தது? அடேயப்பா...! இந்த யானைப் பல்தான் எத்தனையெத்தனை கேள்விகளை எழுப்புகிறது? - அந்தச் சின்னவயதிலேயே தான் பலமாதிரியும் நினைத்துப் பார்த்ததை இப்பொழுதும் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

அப்பாவின் அந்த மரப் பெட்டிக்குள் இன்னும் என்னென்னவெல்லாம் விசித்திரங்கள் கிடந்தன. கருப்பும் சிவப்புமாகப் பொடிக் கயிறுகள் பளபளவெனக் கிடக்குமே...பார்த்தாலே ஒரு மாதிரி பயத்தை உண்டு பண்ணக்கூடியவையாயிற்றே அவைகள். சின்னச் சின்ன சங்குகள்...தாயத்துகள்...தீராத காய்ச்சல் என்றால் அந்தக் கயிற்றை ஒரு முழத்துக்கு எடுத்து, ;தாயத்தைக் கோர்த்து, பாட்டி கட்டி விடுவாளே...! பாட்டி மாந்த்ரீகம் தெரிந்தவளாய் இருந்திருப்பாளோ? அன்பான பாட்டியாயிற்றே! அதற்கெல்லாம் ஏன் போனாள்? வீடு வீடாய்ப் போய் விசேடங்களுக்கு முறுக்குச் சுற்றி வந்து கிடைக்கும் பட்சணங்களையெல்லாம் கொண்டு வந்து ஆசை ஆசையாய் எங்களுக்குத் தருவாளே...! அந்தப் பாட்டி நல்லதைத்தான் செய்திருப்பாள்...ஊருக்கே வியாதி போக்கும் மருத்துவச்சியாகவல்லவா இருந்தாள் அவள்!

அப்பாவின் அந்தப் பழக்கங்கள்தான் தன்னிடமும் இப்படித் தொற்றிக் கொண்டிருக்கிறதோ என்னவோ...

“இந்த வேண்டாததுகளையெல்லாம் தூக்கி எறிஞ்சாலே வீடு பாதியாக் குறையும்...”

“அயய்ய்யோ...அப்போ வீடு சின்னதாப் போகும்ங்கிறியா...?”

“இந்தக் கிண்டலுக்கு ஒணணும் குறைச்சல் இல்லே...வீட்டுல நிறைய இடம் மிஞ்சும்னு சொன்னேன்...” - சகுந்தலாவின் கோபங்களை சீரியஸாக அவர் என்றுமே எடுத்துக் கொண்டதில்லை...அவளுக்கும் வயதாகிவிட்டது, இந்தப் பொருட்களைப் போல...

“அப்போ நானும் அதுகளும் ஒண்ணா?”

“அய்யய்யோ...உன்னை அப்படிச் சொல்வேனா? நீ என்னைக்கும் எனக்குப் புதுசால்ல தெரியறே...”

“போதும், இன்னும் பத்து வயசு போகணும்...”

“போகட்டுமே...அப்போவும் நீ என் கண்ணுக்கு அழகாத்தான் தெரிவே...”

அந்தக் காலத்து மரத் தொட்டில் ஒன்று வைத்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தேக்கு மரத் தொட்டில. அழகிய வேலைப்பாடுள்ளது. தன் குழந்தைகள் மூவரையும் அதில் போட்டு அழகு பார்த்திருக்கிறார் அவர். பேரக் குழந்தைகளைப் போடத்தான் இன்னும் ஆகவில்லை. இந்தக் காலத்தில் அதில் போடுகிறேன் என்றால் தாங்குவார்களா? உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா...என்பார்கள். காலம் அந்தப் பரணில் தூக்கிப் போட்டு விட்டது அதை. நாற்புறச் சட்டங்களில் மாக் கோலமிட்டு குழந்தையை அந்தத் தொட்டிலில் போட்டால் அந்தக் கிருஷ்ணனையே போட்டு அழகு பார்ப்பது போலல்லவா இருக்கும். யார் உணர்வார்கள் அந்தப் பெருமைகளையெல்லாம்?

பெரியவர்கள் செய்யும் எந்தக் காரியங்களையும் போற்றத் தெரியாத சமுதாயம். ஈரமற்ற தலைமுறையாகவல்லவா மாறிவிட்டது. எதானாலும் தூக்கி எறிப்பா...வெட்டியா இடத்தை அடச்சிட்டு...என்கிறார்கள். உபயோகப்படுத்தி, தூக்கி எறியும் மனப்பான்மை...அப்படித்தானே பெற்ற தாய் தந்தையர்களையும் முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்கள்? தனக்கு இன்னும் அந்த நிலை கிட்டவில்லை. தான் உண்டு, தன் மனைவியுண்டு. தன் பென்ஷனுண்டு என்று காலம் கழிந்து கொண்டிருக்கிறது அவருக்கு. யார் யாரை ஒதுக்குவது? ஒட்டவும் வேண்டாம்...ஒதுக்கவும் வேண்டாம். ஒம்பாடு ஒனக்கு, எம்பாடு எனக்கு...காலம் அப்படியே தன்னைக் கொண்டு செலுத்தி விடும் என்றுதான் கழித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு நாளாய்...இன்று வரை பாதகமில்லை.

படுக்கையில் விழாமல், யாருக்கும் பாதகமில்லாமல் போய்ச் சேர வேண்டும். சீப்பட்டுச் சாகக் கூடாது. “குடிக்க ஜலம் கொண்டான்னார்...போய் எடுத்துண்டு வர்றதுக்குள்ளே பிராணன் போயிடுத்து...” என்று சொல்ல வேண்டும். அதில் கூட மனிதனுக்கு சுயநலம்தான். அவள் படுக்கையில் விழுந்தால் ஓடி ஓடிப் பார்க்கத் தனக்கு பொறுமை உண்டு. சகிப்புத்தன்மை உண்டு. ஆனால் தான் விழுந்தால் அதெல்லாம் அவளுக்கு இருக்குமா? சந்தேகம் வரத்தான் செய்கிறது. மனைவியிடமே சீப்பட்டு, வார்த்தை கேட்டு, பீ மூத்திரம் அள்ள வைத்து...ஈஸ்வரா...போதும்...போதும்... என்னைச் சீக்கிரம் கொண்டு போ... குழந்தையாய்ப் பிறந்து, கடைசியில் குழந்தையாகவே மாறி விடுகிறார்களோ?

இப்படிக் காலங்கார்த்தாலே கொட்டித் தேடிக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்த போது அவருக்கே சற்று வெட்கமாகத்தான் இருந்தது. வேலையில்லாத நாசுவன் பூனையைப் பிடிச்சு செறச்சானாம்...அது போல இருக்கு நீங்க பண்ற காரியம்... என்று சற்று முன் அலுத்துக்கொண்ட சகுந்தலாவை நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

“எல்லாத்தையும் தூக்கிக் கிடாசுங்கோ மூலைல...தெருவுல ப்ளாஸ்டிக்காரன் வருவான். போட்டுட்டு நாலு பக்கெட்டாவது வாங்கலாம். அரிசி போடக் கூட ஒரு டிரம் வேண்டிர்க்கு...

“சர்தான்...உங்கிட்டேயிருக்கிற துணிமணியெல்லாம் வாங்கிண்டு, இருக்கிற தட்டு முட்டையும் வாங்கிண்டு, அதுக்கு ஒரு விலையைச் சாமர்த்தியமாச் சொல்லி, கடைசில மீதிக் காசைக் கொடுங்கம்மான்னு உங்கிட்டயே பேரம் பேசி நழுவிடுவான் அவன்....அது தேவையா?”

“எதுக்கும் மனசாகாது உங்களுக்கு... இப்டி எத்தனையைச் சேர்த்துச் சேர்த்து வச்சுப்பேள்...?”

“உனக்கென்னடி வலிக்கிறது...நாந்தானே போட்டுக்கிறேன்...உன்னையா இந்தச் சட்டையையும், பேன்டையும் போட்டுக்கச் சொல்லப் போறேன்...”

“அதுக்காக பீரோ நிறைய இத்தனை பழசையுமா வச்சிக்குவாங்க...ஒரே பிசுக்கு நாத்தம் முகத்துல அறையறது... எல்லாத்தையும் போட்டுட்டு புதுசா நாலே நாலு வச்சிக்குங்கோ...”

தான் புதிதாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவளுக்குள்ள மனசைத்தான் உணர்ந்தார் அவர். ஓய்வு பெற்று விட்டால் பழைய ஆள் போல் அலைய வேண்டுமா? கிழம்போல் திரிய வேண்டுமா? தானும் பழசு, தன் உடைகளும் பழசு என்று. அப்படியெல்லாம் எண்ணமில்லை அவருக்கு. போதுமே! என்கிற நினைப்புதான். அதற்காக கிழியாத பேன்ட் சட்டைகளையெல்லாம் தூக்கி வீச முடியுமா? ஐநூறு அறுநூறு என்று துணி எடுத்து, இருநூறு முன்னூறு என்று தையற் கூலி கொடுத்து புத்தம் புதிதாய்க் கருக்கழியாமல் இருந்த உடைகளையெல்லாம் ஃபாஷன் மாறிப் போச்சு என்று போட்டுவிட்டுப் போய் விட்டான் கடைசிக்காரன். என்ன டிரஸ் பண்ணுகிறார்கள் இப்போது? உடம்போடு ஒட்டி...பிய்த்துத்தான் எடுக்க வேண்டும் என்பது போல...

என்னடா... பாதிச் சட்டைதான் இருக்கு...மீதியை எங்கே?

இது கட்ஷர்ட்ப்பா... உங்களுக்குத் தெரியாது...

அடப்பாவி... கொடுக்கிற காசுக்கு ஒரு மீட்டர் துணி கூடக் கொடுக்க மாட்டான் போலிருக்கு... அதென்ன பேன்ட்... ரெண்டு காலிலும் அங்கங்கே ஓட்டைகள்... பல்லிளித்தாற்போல ஜிப்புகள்... லாலியும் பீலியுமாய் தொங்கும் வால்கள்... கேட்டால் அதற்கென்னவோ பேர் சொல்கிறான். அது கூட மனசில் நிற்கவில்லை...இதை ஃபாஷன்னு எந்த மடையன் கொண்டு வந்தான்...? இதைப் போட்டுட்டுஅலைஞ்சா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கில்ல கூட்டிட்டுப் போயிடுவான்...

“அவனோடது உங்களுக்கு தொள தொளன்னு இருக்கும்... போட்டுட்டு கிறுக்கு மாதிரி அலையாதீங்கோ...”

இத்தனை வருடத் தாம்பத்தியத்தில் இது கூடவா சொல்ல உரிமையில்லை.

“இனிமே எனக்கென்னடி... அப்படியெல்லாம் ஒணணு ம் இருக்காது... நீ வேண்ணா பார்க்காதே... அவ்வளவுதானே...”

“கண்ணை மூடிக்க முடியுமா...எல்லாத்துக்கும் உங்களைத்தானே பார்த்தாக வேண்டிர்க்கு...

“அப்போ ரசிக்கக் கத்துக்கோ... நாலுதரம் பார்த்துட்டேன்னா எல்லாம் சரியாப் போயிடும்...”

“உங்களண்ட பேச முடியுமா...”

பார்த்துப் பார்த்து எல்லாம் சரி பண்ணி விட்டார்தான். எம்மிங் போனது... பட்டன் போனது... கொக்கி பிரிந்தது... என்று தேடித் தேடி தைத்து முடித்து விட்டார். என்றோ சேமித்து வைத்திருந்த நூல் கண்டும் ஊசியும் இன்று எவ்வளவு பயன்படுகிறது? இதெல்லாம் எதுக்கு என்று தூக்கி எறிந்திருந்தால் கதையாகுமா?

“இந்த உலகத்துல எல்லாப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு உபயோகம் உண்டு. எதுவும் வீண் இல்லே...”

“அதுக்காக இப்டிக் குட்டிக் குட்டிப் பென்சில்களைக் கூடவா சேர்த்து வைப்பாங்க.. விரல் நீளம் கூட இல்லை அது... தூக்கி எறிங்க எல்லாத்தையும்...”

ஏனிப்படி இந்தக் காரியத்தை அநேகம் பேர் இப்டி வெறுக்கிறார்கள்? யோசித்தார் கிருஷ்ணமூர்த்தி. இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்ற சகிப்புத்தன்மை இல்லையே?

“அதென்ன அப்டி சொல்லிட்டே? காந்திஜியே இந்த மாதிரி சின்னூண்டு பென்சிலைத்தான் பயன்படுத்துவாராம்... கடைசி வரைக்கும் விடமாட்டாராம்...தெரியுமா உனக்கு? ஒரு முறை அது தொலைஞ்சு போயிடுச்சின்னு தேடி எடுத்தாத்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சு கண்டு பிடிச்ச பின்னாடிதான் அடுத்த வேலைக்கே போனாராம்...நான் எலெக்ட்ரிக் பில்லையெல்லாம் சேர்த்துச் சேர்த்து வைக்கிறேனே...அதுக்குக் கூட நிறையக் கதை இருக்கு... வாஜ்பாய் இருக்காரே... வாஜ்பாய்... முன்னாள் பிரதமர்... அவருக்கே டெலிபோன் பில் கட்டலைன்னு எத்தனையோ லட்சத்துக்கு பில் பாக்கின்னு வந்ததா நியூஸ் போட்டிருக்கான்...படிச்சிருக்கியா...? கட்டின மின்சாரக்கட்டணம் கட்டப் படலைன்னு பியூஸ் கேரியரைப் பிடுங்கிண்டு போன கதையெல்லாம் இருக்கு...நீ வீட்டுக்குள்ளயே இருக்கிறதுனாலே உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை... அதனால எதையும் ஏளனமா நினைச்சிடாதே...”

“நன்னா எல்லாத்தையும் சேர்த்து வச்சிண்டு கொஞ்சிண்டிருங்கோ... யார் வேண்டான்னது.. யார் சொல்லி யாரைத் திருத்த முடியும்... பெத்த பிள்ளேளே கேட்க மாட்டேங்கிறதுகள்... எல்லாம் பட்டுப் பட்டுத்தான் திருந்தணும்... அதுக்கான நஷ்டங்களையும் ஏத்துண்டுதான் ஆகணும்... இந்த லோகமே அப்டித்தானே இயங்கிண்டிருக்கு...”

“இந்த மாதிரி எதுக்கோ எதையோ சம்பந்தப்படுத்திண்டு புழுங்கிறதுனாலதான் உனக்கு பி.பி... ஷூகர்னு கஷ்டப்படுத்தறது... என்ன மாதிரி சாதாரணமா இருக்கப் பழகிக்கோ... எதையும் மனசுல போட்டுக்காதே... நடக்கிறபடிதான் நடக்கும்... நம்மால எதுவும் ஆகாது... அதது நடக்கிறபோது அததுக்குத் தகுந்தாற்போல ஆக்ட் பண்ணின்டு போக வேண்டிதான்... நாம எல்லாருமே நடிகர்கள்தானே... எப்போவரைக்கும் இந்த வேஷம் உண்டோ அப்போ வரைக்கும்....”

சகுந்தலா பல சமயங்களில் இப்டி சோகத்தில் ஆழ்ந்து விடுவதில் அவருக்கு நிரம்ப வருத்தம் உண்டு. வெவ்வேறு மன நிலைகள் உள்ள இருவரை இப்படிச் சேர்த்து வைத்து காட்சிகளை நகர்த்துகிறானே அந்தப் பரம்பொருள்... வியந்து கொள்வார் அவர். எதையோ ஒன்றைத் தேடப் போக என்னென்னவோ நிழலாடுகிறது மனதில்.

மனிதனை ஒரு கட்டுக்கோப்புக்குள் நெறி தவறாமல் வைத்திருப்பது இந்த மாதிரி விழுமியங்கள்தானே? என்னதான் பேசினாலும், சமாதானம் பண்ணிக் கொண்டாலும், அந்த வரைகோட்டினைத் தாண்டிவிட முடியுமா? என்னது விழுமியங்களா? அப்டின்னா? அதுக்குவேறே நா விளக்கம் சொல்லியாகணுமா? ஈஸ்வரா...அப்டின்னா...மதிப்புமிக்க விஷயங்கள்னு அர்த்தம்... இங்கிலீஷ்ல மாரல் வேல்யூஸ்னு சொல்வாங்க...அதையெல்லாம் யார் இப்போ நினைச்சுப் பார்க்கிறாங்க...ஒரு நாட்டினுடைய இறையாண்மைன்னு சொல்றோம்...அப்டின்னா கடவுளக் கும்பிடுற விஷயம்னா அர்த்தம்? கடவுளக் கும்பிடுறதுக்கு ஒப்பான, மதிப்புமிக்க, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்கள்னு புரிஞ்சிக்கணும்... இன்றைய இளைய தலைமுறைக்கு நாமதானே இதைச் சொல்லி ஆக வேண்டியிருக்கு? அவுங்களுக்கு எங்கே தெரியறது?

அதே மூத்த தலைமுறையைச் சேர்ந்த நீயே தடுக்கிறே? அவனுக்குத் தெரிய வேண்டாமா? அவனுக்கு வழிகாட்டுறது எது? அவனைத் தடம் புரளாமக் கொண்டு செலுத்தறது எது? நாமதானே சொல்லிக் கொடுத்துத் தெளிய வைக்கணும்? இப்டி எல்லா இடத்திலயும் யாரும் சொல்லிக் கொடுக்காததுனாலதான் நம்ப கலாச்சாரமே படிப்படியாப் பாழாயிண்டிருக்கோன்னு தோணுது எனக்கு...ஏன் முதியோர் இல்லம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டிருக்கு? இதுனாலதான்... உன் பிள்ளைகள் நம்பள வச்சிக் காப்பாத்தணும்ங்கிற ஆதங்கத்துல சொல்லலை நான்...

“அதென்ன உன் பிள்ளைகள்? நம்ப பிள்ளைகள்னு வாய் வராதாக்கும்...”

“சரி வச்சிக்கோ... அவ்ளவுதானே... இதிலென்ன குறையப் போகுது... உண்மை உண்மைதானே... நா சொல்ல வர்றது அதில்லே... அவன் வாழ்க்கைக்கு சில தீர்மானமான நகர்வுகள் இருக்கணும்னு சொல்ல வர்றேன்... சம்பாத்தியம் கைகூடிட்டதாலே எல்லாமே கைவந்துடுத்துன்னு அர்த்தமில்லே... வாங்குற காசை அர்த்தம் பொருத்தத்தோட செலவு பண்ணணும்... மிச்சப்படுத்தணும்... பிற்காலத்துக்கு உதவுற மாதிரி சேமிக்கப் பழகணும்... ஒழுங்கான வழில வராத செல்வத்தை எத்தனை அரசியல்வாதிகள் எவ்வளவு அக்கறையா சேமிக்கிறான் வாரிசுகளுக்கு... அவாளையெல்லாம் கவனிக்கணும்... அவுங்களே அப்படியிருக்காங்கன்னா... உழைச்சு சம்பாதிக்கிற நாம எத்தனை அக்கறையா இருக்கணும்? இதுக்கெல்லாம் அடிப்படை நா சொல்ற விஷயங்கள்தான்... இவ்வளவு என்னத்துக்கு? சுருக்கமாச் சொல்றனே... அறிவியல் தொழில் நுட்பம் விஞ்சி நிற்கிற இந்தக் காலத்துலகூட திறமைசாலிக்குத்தான் முதலிடம்... அது கண்கூடாத் தெரியுதில்லே? எவனொருத்தன் சின்சியரா முழுமையான கடமையுணர்வோட தன் பணிகளைத் திறம்பட முடிக்கிறானோ அவனுக்குத்தான் முதலிடம்... இன்னும் நூறு வருஷம் போனாலும் திறமைக்கும், உறார்டு ஒர்க்குக்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்துக்கும்தான் முதல் மரியாதை.

எழுதி வச்சிக்கோ... அதில எந்த மாற்றமும் வரப் போறதில்லே... ஆனா அந்த மாதிரித் திறமை ஒருத்தன்ட்ட வெளிப்படுறதுன்னா... அதுக்கு நா சொல்ற விழுமியங்கள்தான் அடிப்படை... இன்றைய கல்விக்கும் அதுக்கும் துளிக்கூடச் சம்பந்தமில்லாம இருக்கலாம்... ஆனா வேலைல உட்கார்ந்திட்டா அதில ஒரு நிதானமும், நிச்சயமான நகர்வும், திடமான முடிவுகளும், திறமையான செயல்பாடுகளும் அமையணும்னா... அதுக்கு அடிப்படை இந்த மாதிரி எல்லா நல்லவைகளையும் சொல்லிக் கொடுத்து உருவாக்குறதுதான்...”

ஒரு நிமிடம் நிறுத்தினார் கிருஷ்ணமூர்த்தி. விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா. அப்பப்பா! என்ன பேச்சு இந்த மனுஷனுக்கு...?

“இந்த தேசத்தின் மேல பற்றுள்ள ஒரு நல்ல பிரஜையால இதையெல்லாம் பற்றிச் சிந்திக்காம இருக்க முடியாது... இதுக்குப் பேர்தான் இறையாண்மை... முகமறியாத ஒருத்தனுக்காக இரக்கப்படுறது... நாட்டுல எங்கோ நடக்குற துயர சம்பவத்துக்காக ;வருத்தப்படுறது... கண் கலங்குறது... அய்யோ கடவுளே..ஏன் இப்டியெல்லாம் நடக்குதுன்னு வேதனைப்படுறது... இதெல்லாம் தான் ஒரு நல்ல மனுஷனுக்கு அடையாளம்...அந்த நல்ல மனுஷந்தான் இந்த நாட்டோட நல்ல பிரஜை... அந்த மாதிரி நிறையப் பேர் இன்னும் இந்த நாட்டுல இருக்கிறதுனாலதான் இன்னும் இங்கே மழை பேய்ஞ்சிண்டிருக்கு... தர்மம் முற்றிலுமா அழிஞ்சிடலை... இன்னமும் நிறைய நல்லவைகளும் நடந்திண்டு இருக்கு... நிறைய நம்பிக்கைகளும் இருக்கத்தான் இருக்கு...”

இந்த மனுஷன் இன்னும் தன் மனசுல எதை எதையெல்லாம் தேக்கி வச்சிண்டிருக்கார்? விடாமப் பொழுது பொழுதா இப்டிக் கொட்டித் தீர்க்கிறதுனாலதான் இவர் இத்தனை ஆரோக்கியமா இருக்காரோ? பார்க்கிறதுக்கு வத்தக் காச்சிமாதிரி இருந்திண்டு என்ன பேச்சுப் பேசுறார் மனுஷன்?இவர் இப்டிச் சேர்த்து வச்சிண்டிருக்கிற பொக்கிஷங்கள்தான் இவருக்கு இத்தனை கதையைச் சொல்றதோ? பெரிய பெரிய மகான்களெல்லாம் பயன்படுத்தின பொருட்களையெல்லாம் பத்திரமாப் பாதுகாத்து மியூசியம்னு வச்சிருக்காளே... அதுக்கு அர்த்தமில்லாமப் போகுமா? அது அவாளோட பெருமைகளைப் பேசறதுன்னுதானே அர்த்தம்... அதமாதிரிதான் இதுவும் போலிருக்கு...இந்த அப்பாவி மனுஷனோட பொக்கிஷங்கள் இதுதான் போலிருக்கு... ஓட்டை உடைசலானாலும், அவருக்கு அருமைதானே... ஏதாச்சும் ஒண்ணு ரெண்டாவது நாளைக்கு அவரை ஞாபகப்படுத்தாதா?

கத்திக் கத்திப் பேசின மனுஷனுக்கு தொண்டை காய்ஞ்சி போயிருக்காதா? பாவி மனுஷன் வாயைத் திறந்து கேட்கமாட்டார்... கட்டின பொண்டாட்டிகிட்டயே கூச்சப் படுற ஜென்மா ஆச்சே... நம்மால அவளுக்கு சிரமம் ஆகாதுன்னு நினைக்கிற பாவப்பட்ட ஆத்மா ஆச்சே... கழிவிரக்கப்பட்டுக் கொண்டே கையில் சூடாகக் கலந்த காபியோடு அவரை நோக்கி வருகிறாள் சகுந்தலா.

நூல் கோர்த்த அந்தப் பொடி ஊசியைப் பேன்ட் வழியாகக் கொக்கி ஓட்டைக்குள் நுழைக்க யத்தனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென்று கவனம் பிசகிட நறுக்கென்று விரலில் குத்திக் கொள்கிறார்.

- உஷாதீபன்