மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், சிறந்த கல்வியாளருமான முனைவர் வே.வசந்திதேவியுடன் 2009 கல்வி உரிமை சட்டம் குறித்த நேர்காணல்:

கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளது. இச்சட்டம் எல்லோருக்கும் கல்வி என்பதை இப்போதாவது சாத்தியப்படுத்துமா? ஏதேனும் குறைபாடுகள் இதில் உள்ளதா?

பல ஆண்டுகாலமாக, பாடுபட்டு இப்போதுதான் கல்வியை அடிப்படை உரிமையாக அடையப் பெற்றுள்ளோம். பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்றுதான் அரசியல் சாசனம் 1950இல் கூறியது. ஆனால், பத்தாண்டுக்குள் கொடுக்க முடியாமல் பல பத்தாண்டுகள் கடந்து தற்போதுதான் கல்வி அடிப்படை உரிமையாக சட்டம் வந்துள்ளது. அதுவும் நிச்சயமாக, பல குறைபாடுகளுடன் தான் வந்துள்ளது. எல்லோருக்கும் இதன் மூலம் கல்வி கிடைத்துவிடுமா என்பதே சந்தேகம் தான். குறைபாடுகள் என்று சொன்னால் பல உள்ளன.

6 முதல் -14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையாக இச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பருவக் கல்வி அதாவது, -5 வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்விக்கு இதில் எதுவுமில்லை. வகுப்பறைக்கு வேண்டிய பக்குவத்தை இந்த முன்பருவக் கல்வி தான் உருவாக்கும். உலகம் முழுவதும் முன்பருவக் கல்வி தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்ணிகிருஷ்ணன் தீர்ப்பும் சரி, நமது அரசியல் அமைப்பு சட்டமும் சரி பதினான்கு வயது வரை உள்ளவர்களுக்கு கல்வி என்று தான் சொல்லியுள்ளதே தவிர, ஆறு வயது வரை உள்ள குழந்தைகளை தவிர்த்துவிட்டு அதற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என எங்கும் இதற்கு முன்பு சொல்லப்படவில்லை.

2. அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று சமத்துவம். இது கல்வியில் தான் மிக அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் சமத்துவமற்ற கல்வித் திட்டம் இந்தியா போல் வேறு எங்கும் இல்லை. இதை மாற்ற பொது, அருகமை பள்ளி மிக அவசியம் தேவை. கோத்தாரி கமிஷன் உட்பட பல குழுக்கள் இதை வலியுறுத்தியுள்ளது. இதைப் பற்றியும் எந்த பரிந்துரையும் இதில் இல்லை.

3. கல்வி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என்று சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் இது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை.

4. நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. வேண்டிய நிதி ஒதுக்கப்படும் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து இதற்கு நிதி ஒதுக்கும் என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவைகள் வேறுபடும். மத்திய அரசுதான் கூடுதல் அதிகாரங்களை வைத்துள்ளது. எனவே, மத்திய அரசு கூடுதல் நிதி பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் விதிகள் பற்றி?

பள்ளிக் கூடங்களில் என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்று சட்டம் வலியுறுத்தியுள்ளது. இவைகள் பள்ளிக்கூடங்களில் இல்லையென்றால் நாம் நீதிமன்றத்தை அணுகலாம். இதுதான் அடிப்படை உரிமையின் பலன். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். 5ஆம் வகுப்புகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், எத்தனை வகுப்பறைகள் என்றெல்லாம் விரிவாக இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் நிறைவேற்ற பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றுதான் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் தற்போது இயங்கி வருகிறது. பெட்டிக்கடை நடத்த கூட அனுமதி தேவைப்படுகிறது. ஆனால், பள்ளிக்கூடம் நடத்த அனுமதி கட்டாயமாக்கப்படாமல் இருந்தது. இச்சட்டத்தின் மூலம் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல வரவேற்க தகுந்த விஷயங்கள் இதில் உள்ளது. நமது வேலை என்னவென்றால், கடுமையாக போராடி பெற்ற இவ்விஷயங்களை முறையாக அமல்படுத்த போராடுவதும், கண்காணிப்பதும் தான்.

எந்தவகையில் கண்காணிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?

சட்டம் சொல்லும் விதிகளை அமல்படுத்தி பார்த்தால் தமிழகத்தில் உள்ள 90 சதவிகித பள்ளிகளை மூடவேண்டிவரும். குடிதண்ணீர், வகுப்பறை, விளையாட்டு மைதானம், கழிப்பறை என பல்வேறு விஷயங்கள் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் மாணவர்களுக்கும் கிடைக்கிறதா என்பதை நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அமைப்பு எது என்று சொன்னால் ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட வேண்டிய பள்ளி நிர்வாகக்குழு தான். இந்த குழு 75% அப்பள்ளியை சார்ந்த பெற்றோர்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எந்தெந்த சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எத்தனை சதவீதம் படிக்கிறார்களோ அதே விகிதத்தில் இக்குழுவிலும் பெற்றோர்கள் இருக்கவேண்டும். குறிப்பாக குழுவில் 50 % பெண்கள் இருக்கவேண்டும். இது போக பள்ளியின் மீது அக்கறை உள்ளவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். நாம் இதில் நமக்கு தெரிந்தவர்களையும், சரியாக கண்காணித்து கேள்வி எழுப்புபவர்களையும் இணைக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றபோது, பல பள்ளிகளில் இந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை. சில பள்ளிகளில் இருப்பதாக சொன்னாலும் பெயரளவில் தான் உள்ளது. ஒரு பள்ளிக்கு என்ன வேண்டும், எது தேவை என்று சொல்லுவதும் இக்குழுதான். இக்குழு கேட்கவில்லை என்றால் பள்ளியில் இருந்து எதுவும் கேட்கவில்லை. எனவே, நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று அரசு சொல்லிவிடும். ஆசிரியர்கள் முறையாக வருகிறார்களா என்பதையும் இக்குழுவே கண்காணிக்கும். பல மலை கிராமங்'களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போவதே இல்லை. ஆசிரியர்கள் மீதுள்ள பெரியகுறை அதுதான். வாரம் ஒருமுறை சென்று கையெழுத்து போடுகின்றனர். இதையெல்லாம் யார் கேட்பது-? இது போன்ற பள்ளிகளில் உள்ள பெற்றோர்கள் எல்லாம் வாயில்லா பெற்றோர்கள். ஏதோ தங்கள் குழந்தை மதிய உணவுடன் காலை முதல் மாலை வரை பத்திரமாக ஒரு இடத்தில் இருந்தால் போதும் என்பது மட்டும் தான் அவர்களின் நினைப்பு. 30:1 என்கிற விகிதத்தில் ஆசிரியர்கள் இல்லை என்பதை நாமும் கேட்கிறோம். ஆனால் இருக்கும் இடத்திற்கு முறையாக ஆசிரியர்கள் போகிறார்களா என்பதையும் நாம் கேட்க வேண்டியுள்ளது.

வேறு என்ன சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது?

இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை கண்காணிக்கிற பொறுப்பு தேசிய அளவில் National Commission for Protection of Children என்கிற அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதை இச்சட்டம் தடை செய்துள்ளது. குழந்தைகளை அடிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. வகுப்பறைகள் அதிகாரக் கூடமாக மாறிவிட்டது. சாதி பெயரை சொல்லி திட்டுவது, அடிப்பது, என எது செய்தாலும் இந்த சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்கப்படும். இச்சட்டத்தின் படி எட்டாம் வகுப்புவரை எந்த குழந்தையையும், பெயில் ஆக்கக் கூடாது, அப்படி என்றால் எதையும் படிக்க வைக்காமல் அடுத்த வகுப்புக்கு அனுப்புவதல்ல, அந்த வகுப்புக்கு தேவைப்படுவதை அந்த குழந்தைகளை செய்ய வைத்து, பின்தங்குகிற மாணவர்களுக்கு சிறப்பு இலவச வகுப்புகள் பள்ளியிலே நடத்திட வேண்டும் என்றெல்லாம் இதில் உள்ளது.

முதலில் இதில் இருப்பதை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக தனியார் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். இதை செய்தாலே பல பள்ளிகளை மூடவேண்டிவரும். அரசு பள்ளிகளை நோக்கியும் பலர் வருவார்கள். ஏன் அரசு பள்ளிகள் புறக்கணிக்கப் படுகிறது என்றால் கொஞ்சம் வசதியுள்ளவர்கள், தனியார் பள்ளிக்கு போவதனால் தான். ஏழைகள் தான் அரசு பள்ளியில் படிக்கின்றனர். டாக்டர், வக்கீல் என அனைத்து விதமான வகுப்பை சேர்ந்தவர்களின் குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்தால் அரசு பள்ளியின் தரமும் உயரும். என் பேத்தி அமெரிக்காவில் அரசு பள்ளியில் தான் படிக்கிறாள் அங்கு அனைத்து வசதிகளும் இருக்கிறது. பல வளர்ந்த நாடுகளில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. எங்கள் காலத்தில் எல்லாம் குட்டி குட்டி மகாராஜாக்களின் பிள்ளைகளும், ஏழை வீட்டு பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் படித்தனர். அப்படி படித்து வந்தவர்கள் தான் இன்று பல துறைகளில் இருக்கின்றனர். அப்துல் கலாம் கூட பல இடங்களில் சொல்கிறார் அல்லவா?

இன்று ஏன் தனியார் பள்ளிகளை நோக்கி போகின்ற சூழல் உருவாகிஉள்ளது..? இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினாலே இது சற்று மாறும்.

இச்சட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு எப்படி உள்ளது?

இதை அமல்படுத்த எல்லா மாநிலத்திலும் தனியாக ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். இன்னும் தமிழகத்தில் இக்கமிஷன் அமைக்கப்படவில்லை. பல அரசு தலைமை ஆசிரியர்களுக்கே இது பற்றி எதுவும் தெரியவில்லை. ஒரு அரசு பள்ளியில் 54 பிள்ளைகளை பெயில் ஆக்கிவிட்டனர். பொது விசாரணையில், அப்பள்ளி தலைமை ஆசிரியரை கேட்டால், ஏன் நான் நிறுத்தக்கூடாது பிறகு எப்படி ரிசல்ட் வரும்? என்று கேட்கிறார். சட்டம் பற்றி எதுவும் தெரியாது என்கிறார். அரசை கேட்டால் தற்போதுதான் சுற்றறிக்கை அனுப்புகிறோம் என்கின்றனர். இவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதற்காக எதுவும் இல்லை என்று ஆகிவிடாது. சட்டம் அமலுக்கு வந்து விட்டது, மக்கள் கண்காணிப்பு இருந்தால் தான் மாற்றம் வரும் இல்லை என்றால் இதே நிலை தான் தொடரும்.

சட்டத்தை அமல்படுத்த நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொன்னீர்கள்? பிறகு எப்படி சட்டம் அமலாகும்?

பணம் இல்லை என்று சொல்ல முடியாது, அடிப்படை உரிமை என்று ஆன பிறகு பணம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். வாழ்வதற்கான உரிமையை வழங்கி விட்டு கொலை நடக்கும் போது கொலைகாரனை பிடிக்க பணம் இல்லை என்று சொல்ல முடியுமா? பணம் இல்லாமலா இத்தனை ஊழல்கள் நடக்கிறது. பொருளாதார அறிஞர். அமர்த்தியாசென் சொல்லுவார். If a state like India dose not have resource for education and health it is utter unabashed nonsense. அதாவது கல்வி, சுகாதாரம், மருத்துவத்திற்கும் பணம் இல்லை என்று இந்தியா போன்ற நாட்டில் சொல்லுவது வடிகட்டிய பொய் என்கிறார்.

சட்டத்தை முறையாக அமல் படுத்தாத பள்ளிகளை மூட சொல்வதற்கு பதிலாக ஏன் அரசே ஏற்று நடத்த சொல்லக் கூடாது?

அரசு பள்ளிகளை ஏற்று நடத்தாமல், இருக்கும் பள்ளிகளையும் மூடத்தானே பார்க்கிறது. மாணவர்கள் இல்லை என்று கூறி சென்னையில் மட்டும் 30 மாநகராட்சி பள்ளிகளை கடந்த கல்வி ஆண்டில் மூடி உள்ளதே?சட்டத்தை பள்ளிகள் ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதே நேரம், அமல் படுத்தாத பள்ளிகளை அரசு ஏற்று நடத்துவது அல்லது அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது என்பதை செய்துதான் ஆக வேண்டும். அரசு பள்ளிகளில் நல்ல திறமையான ஆசிரியர்கள், பறந்து விரிந்த இடம் என வசதிகள் இருக்கத்தான் செய்கிறது. சென்னையை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு வீடுகளை இடித்து மாணவர்களை சென்னையை விட்டு துரத்திவிட்டு மாணவர்கள் இல்லை என்று பள்ளிகளை மூடுகின்றனர்.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி செயல்படுத்தினால் அனைத்து தரப்பு பிள்ளைகளும் வந்து படிப்பார்கள். தரம் என்றவுடன் ஆங்கில வழிக் கல்வி என்று கொண்டு வந்து விடுகின்றனர். எப்படி பிள்ளைகள் படிப்பார்கள். எந்த படிப்பறிவும் இல்லாத பெற்றோர்களின் வீட்டு பிள்ளைகளுக்கு யார் சொல்லிக்கொடுப்பர்கள். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்வியை தான் இது கொடுக்கும். புரிந்துகொள்வதற்கோ, கேள்வி கேட்பதற்கோ கற்றுக்கொடுக்கப் போவதில்லை. கிளிப்பிள்ளை தலைமுறையை தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அதுதானே வசதிபடைத்தவர்களுக்கு தேவை. வகுப்பறைகளில் கேள்விகேட்க கற்றுக்கொள்ளாமல் எங்கு கேட்கப்போகிறார்கள்?

செயல்வழி கற்றல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இது குறித்து அறிக்கை தயாரிக்கும் குழுவில் நானும் இருந்தேன். ஒரு சில குறைகளை நீக்கினால் இது சிறந்த கல்வி முறையாக மாறும். வகுப்பறைகளுக்குள் அதிகார அமைப்பை உடைத்து மகிழ்ச்சியான சூழலை தருகிறது. ஆசிரியரும் மாணவர்களோடு தரையில் அமர்ந்து கற்றுக்கொடுப்பதால் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் அதிகாரம் கொண்டவர்கள் என்ற நிலை தகர்க்கப்படுகிறது. அதே போல் ஆசிரியர்களின் தனி சொத்தாக இருந்த கரும் பலகை மாணவர்களுக்கும் சொந்தமாகிவிட்டது. பயிற்சிகளும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதில் துல்லியமான நிலை இதில் இல்லை. 20:1 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் இல்லை என்றால் இது நடைமுறை சாத்தியம் இல்லை. ஆசிரியர்களுக்கும் கூடுதல் பயிற்சி தேவை.

தேர்வு முறை பற்றி?

நாம் இன்று பின்பற்றும் தேர்வு முறை என்பது மாணவர்களை வடிகட்டும் முறையாகத் தான் உள்ளது. மாணவர்களின் புரிதலின் அளவு என்ன? யாருக்கு எவ்வளவு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கு உணர்த்தும் அறிகுறியே தேர்வு. ஆனால் இன்று மாணவர்களை தரம் பிரிக்கவே தேர்வு பயன்படுத்தப்படுகிறது. CBSE இல் உள்ளது போல் Continues comparitive assesment தேவை. பாடம் மட்டுமின்றி விளையாட்டு, கலை, போன்று பன்முக துறையில் மாணவர்கள் எவ்வாறு உள்ளனர் என்றும் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் பள்ளிகளை விட்டு இடையில் நின்றவர்களில் வறுமையின் காரணத்தைவிட வகுப்பறை கொடுமையே பலரை விரட்டியுள்ளது.

மாணவர்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகளின் கல்வி கொள்கை மற்றும் செயல்படுத்தல் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

திராவிடக் கொள்கை உடையவர்களுக்கும் திராவிடக் கொள்கையற்ற ஆட்சியாளர்களின் கல்வி கொள்கைக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இவர்கள் தமிழ் தமிழ் என்று பேசுகிறார்களே தவிர அதிகமாக தாய்மொழியை (தமிழ்) கற்றுக்கொடுக்காத மாநிலம் தமிழ் நாடு தான். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள், இருமொழி கொள்கையென்று அறிவித்தார்கள். ஹிந்தியை வெளியேற்றுகிறோம் என்று கூறி தமிழைத்தான் வெளியேற்றி உள்ளனர். மற்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கை இருந்தாலும் கட்டாயம் மாநில மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்தே ஆக வேண்டும். வசதி படைத்த குடும்பங்களை சேர்ந்த தலைமுறையினர் தமிழை பள்ளியில் பயில்வதே இல்லை. பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை படிக்கிறார்களே தவிர தமிழை படிப்பதில்லை. இது திராவிடக் கொள்கையில் எந்த வகையிலான மொழிப்பற்று என்று புரியவில்லை. வகுப்பறைகளில் மொழிக்கு என்ன அந்தஸ்து கொடுக்கப்படுகிறதோ அது தான் மொழிக்கான அங்கிகாரம். கல்வியில் தமிழை கொண்டுவராமல் திராவிட இயக்கம் என்ன தமிழை காத்துவிடபோகிறது. செம்மொழி மாநாடு நடத்தினால் மட்டும் போதுமா.. திராவிடத்தின் போதனை சமத்துவம் என்றால், கல்வியின் மூலம் இவர்கள் எந்த சமத்துவத்தையும் கொண்டுவரவில்லை. வசதிக்கேற்ற கல்வி என்பது இங்குதான் அதிக அளவில் உள்ளது.

Pin It