இருட்டறையின்
நிசப்த கொலைக்கு
சாட்சியாய் வெளியேறுகிறது
என் தலையணை நனைக்கும்
கண்ணீர்த் துளி!!

 ***
நித்திரையில்லா
நடுநிசியில்
வார்த்தை  பிச்சைக்காரி
என்னிடம்,
எச்சில் உமிழ்கிறது
என் எதிர்ப்பார்ப்புகளை
இழுத்துச் சுத்தும்
அறை காத்தாடி!!

 ***
இருளில் கழித்த
தனிமைக்கு
எனை விற்ற விலையின்னும்
தெரியவில்லை!!
தனிமையை கையகப்படுத்திட
என் பேனாவிற்கு
வெற்றுத்தாள் துணைவர
அமையவில்லை!!!
விற்றதற்காகவும் தொலைத்தற்காகவும்
அழுது தீர்க்கிறோம்
நானும் என் பேனாவும்!!
 ***
என் அறையின்
ஒவ்வொரு மூலையின்
சமிக்ஞையையும் சுட்டிக்காட்டுகின்றன
ஒவ்வொரு இரவின்
தனிமை மரணத்தையும்
ஒவ்வொரு பொழுதின்
தனிமை விடியலையும்!!

 ***
ஒரு மழை நாளின் 
சன்னலோர துளியோடு
இசைந்து போகவும்
அசை போட நினைவுமாய்
பயணத்தை சுமக்க
எத்தனிக்கிறேன்!!

- ஆர்த்தி நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)