எனக்குப் பிடித்ததெல்லாம்
அவளுக்கும் பிடித்திருக்கும்
அவளுக்கு பிடித்த எதுவும்
எனக்குப் பிடிக்காமலிருந்ததில்லை

என்னைப் போலவே
தனது நேரத்தின் பெரும்பகுதியை
புத்தகங்களுக்குக் கொடுத்திருப்பாள்
தன் இரவுகளில் காதுகளை
இசைக்குத் தாரை வார்த்திருப்பாள்
புதிய சந்திப்புகளில் தனது
நட்புக்கரங்களை நீட்டுவாள்
எதைப்பற்றியும் எல்லோரிடமும்
வெளிப்படையாகப் பேசுவாள்
எப்போதாவது தூரிகை தொட்டு
ஓவியம் தீட்டுவாள்
தினமும் ஏதாவதொன்றை
வெள்ளைத் தாளிலோ
செல்லிடப்பேசியிலோ பதித்து வைப்பாள்

அவளைப்போலவே
அழகுணர்ச்சியில் ஆர்வம் கூட்டியிருந்தேன்
அறியாமையை விரட்டிக் கொண்டிருந்தேன்
கனவுகளுக்கு புதிய வண்ணம் தீட்டியிருந்தேன்
நட்புகளிடையே நெருக்கம் கொண்டிருந்தேன்
பிடிக்காத விஷயத்தை விட்டு விலகியிருந்தேன்
பிடித்தவற்றை விரும்பி விரும்பி செய்தேன்

அவளைப் போலவே நான்
என்னைப் போலவே அவள்

எனது கவிதைகளையொத்திருந்தது
அவள் கவிதைகள்
அவளது இசையினையொத்திருந்தது எனது இசை

திடீரென் தொடர்பு எல்லையில் இருந்து மறைந்தாள்
ஒருநாள் வந்து
ஒருவனிடம் காதலில் விழுந்ததாகச் சொன்னாள்
அதற்குப் பிறகு
அனைத்திலிருந்தும் விலகியிருந்தாள்
எப்போதாவது சந்திப்பாள்
அவனைப்பற்றியே பேசுவாள்
அவளை மீட்க நினைக்கவேயில்லை
அவளும் மீள விரும்பவில்லை

துக்கம் தாளாது
ஒருநாள் நானும் விழுந்தேன்
அவள் விழுந்ததாகச் சொன்ன
அதே இடத்தில்..
இப்போது
இருவரையும் மீட்க
போராடிக் கொண்டிருந்தான்
இருவருக்குமான அவன்..

--
- இவள்  பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)