என் நண்பனின் மனைவியாய்
நீ வருகிறாய்
கோபக் கூர்மை கொண்ட மனம்
முன்னொரு காலத்தின் கதவுடைத்து
தன்போக்கில் பாய்ந்தது

அதன் தொடக்கம்
உனக்கும் எனக்குமான
முதல் பார்வை பரிமாற்றம்

ஏனோ நான் ரசிப்பவளாய்
நீ இல்லை என்பதை விட
நான் மிகவும் வெறுப்பவளாய் நீ

தொடர்ந்த நாட்களில்
என் துன்புறுத்தல்கள்
உனக்காக முனை தீட்டி நின்றது

உன் புத்தகங்களை
மறைப்பதும் சிதைப்பதும்
பழக்கமாக்கிக்கொண்டேன்

உன் பேனாக்கள் கூட
என் கைவரிசையில்
சிக்காமல்ப் போனதில்லை

பலமுறை என் கவராயத்து உண்டிவில்
எய்த காகித கற்கள்
உன் கருகுழல்க் கொடியில்
மலர்களாய் தான் மலர்ந்தது

எனக்கு பிடிக்கும் என்பதாக
திருப்பி நகைத்தாய்..

அதற்காக
ஆசிரியர் தந்த ஒவ்வொரு அடியும்
இன்பமுற பெற்றுக் கொண்டேன்

இருந்தும் எனக்கான உன்
கண் கலங்கல்
பரிதாபத்தின் சாட்டை அடிகாளாக
என்னை இன்னும் வலியுறத்
தண்டித்துக்கொண்டுதான் இருக்கிறது...

மழைநாளில் நான் நனைய
குடைக்குள் இருந்தும்
உன் விழிகள் நனைத்தன..

உன் பரிதாபத்திற்கு
ஆளானதால் என் விழிகள் பெய்த
ஒவ்வொரு துளிகளையும்
வான் மழைத் துளிகளோடு
சேர்த்தே எவருக்கும் தெரியாமல்
வழியனுப்பினேன் ...!

அதுவரைக்கும்
உன்னை அழவைக்கப்
பயணித்த பாதைகள் அனைத்தும்
தோல்விகளில் தான்
சென்று சேர்ந்திருந்தது...

பள்ளி வாழ்கை முடியும் நாள்
உன் கண்கள் கலங்கின ...

வெறுமனே கிடைத்த
மாபெரும் வெற்றியென
மகிழ்ந்தேன் ....

ஆனால் அங்கு எல்லோரும் தான்
அழுதுகொண்டிருந்தார்கள்
பிரிதலின் வாள்முனையில்
அறுபட்ட மான்களாய்

என் நகைப்பைப் பார்த்து
"உனக்கு இதயமே இல்லையா?"
என்றவனிடம்

"பிரிவதற்கே சேர்ந்தோம்" என
தத்துவம் சொல்லி
புன்னகை வீசி சென்றேன்...!

காட்சிகளை மொத்தமாய் மறைத்தது
தொளில் நண்பனின் கை....!

திடுக்கிட்டு விழித்ததுபோல்
"இவளையா மணந்து கொண்டாய் ?"
என தொடங்கும் முன்னே

"இவர் பள்ளியில் என் வகுப்பு மாணவன்
மிகவும் அன்பானவன்"
என்று சான்றளித்து
புன்னகை தூவினாள்...!

மறுபடியும் அவள் முன்
தோற்று நிற்கிறேன்
கண்கள் கலங்கின....!

"என்னடா கண் கலங்குற?
திருமணத்திற்கு யாரெயும் தெரிவிக்க முடியல அதான்...
மன்னிச்சுக்கடா......" என்றான்

என் வார்த்தைகள் எங்கு மறைந்தனவோ ?
அவர்களை பிரியும் வரை
என் முனகல் மட்டும் நீடித்தது...

அவள் மறைகையில்
அழுதபடியே வீட்டுக்குள்
நுழைந்ததும் சொன்னேன்
நீதான் என்னுயிர்த் தோழி....!!!

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)