கத்தி முனையில் நடப்பதாகவும்
நொறுங்கும் மெலிதான
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்
அலுவலகத்தில் வேணுமென்றால்
தொடர்பாடலாம்.
ஆனாலும் உன்னோடுமா..?
பகலவன் வெம்மையில்
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர்புறக்கணிப்புகளால்.
இன்னமும் எத்தனை தடவைகள்தான்
தன்மானத்தைப் பிணை தருவது?
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன
இறுதிக்கணங்களில்கூட
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்,
காயங்களின் அனுக்கங்களோடே
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்
அவமானங்களைச் சொட்டியபடி.
முன்னைய தடவையும் போலல்லாது
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்……..
இனியும் பொழியேனென் கிரணங்களை
வெறுமனேயுமொரு தனியனுக்காய்..
இனி,
ஒரு உலர் காட்டில் பரவும்
பெருந்தீயின் அதிவேகங்களோடே
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்
பசியவனம்;
இப்பிரபஞ்சமும் தாண்டியே…….!

- எஸ்.பாயிஸா அலி கிண்ணியா,  இலங்கை.

Pin It