Monkey smileமலரும் புன்னகைக்கும்
வெடிக்கும் சிரிப்புக்கும்
எதிரியாக இருந்ததில்லை
எப்போதும் நான்.

ஆயினும்,
சிரித்துக் கொண்டே
எல்லாவற்றையும்
சொல்கிறவருக்கு நிகராக
சிரிக்க முடிவதில்லை
என்னால்.

சிரிக்க முடியாதவற்றுக்கெல்லாம்
சிரிப்பை எதிர்பார்ப்பவர்கள்
கொடிய வன்முறையாளர்களாக
காட்சியளிக்கிறார்கள்
எனக்கு.

போலியாக
சிரித்தே திரவேண்டிய
சூழல்களுக்குப் பிறகு
உண்மையாக சிரிக்கும்
வாய்ப்பிற்காக நான்
ஏங்குவதை
புரிந்துகொள்ளாமலே
போய்விடுகிறார்கள்
போலியாக என்னை
சிரிக்க வைப்பவர்கள்.

பேய் அறைந்த பிணமாக
நான் நிற்க
தனது நகைச்சுவைக்காக
தானே சிரித்துக் கொண்டிருப்பவன்
எப்போது புரிந்து கொள்வான்
நகைச்சுவை என்பது
அடுத்தவரோடும்
தொடர்புடையது என்பதை.

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)