Flowers parkமுல்லை வனத்தினிலே - வைகறையில்
மொட்டு மலர்ந்ததடி!
கொள்ளை அழகினிலே - நெஞ்சை அது
கோடி கவர்ந்ததடி!

காலைப் பொழுதினிலே - முல்லையெழில்
கண்ணைப் பறிக்கையிலே 
சோலை முழுக்கவுமே - புத்தம் புது
சொர்க்கம் விளைந்ததடி!

வீசிடும் தென்றலிலே - நறுமணம்
வீசிய முல்லைகளால் 
நாசியும் காற்றுதனை - மணத்தொடு
நன்கு முகர்ந்ததடி! 

வண்டுகள் பல்வகையும் - வனப்புறு
வண்ணத்துப் பூச்சிகளும் 
கண்டு களித்தபடி - தேனை உண்டு
காதல் புரியுதடி!

பள்ளிச் சிறுவரெலாம் - வந்து வந்து
பார்த்து மகிழ்வது பார்! 
மெல்லிய நல்லிதழைத் - தொட்டுத் தொட்டு
மேனி சிலிர்ப்பது பார்!

மாதர் குலங்களெல்லாம் - மலர் கொய்து
மாலை தொடுப்பது பார்! 
வேதப் புரோகிதரும் - அர்ச்சனைக்கு
வேண்டிப் பறிப்பது பார்!

போற்றுதமிழ்ப் புலவோர் - பொங்கிவரும்
பூமணத் தாக்குதலால்,
சாற்றுகவி புனைந்து - கற்பனைக்குள்
தாவிக் குதிப்பது பார்! 

எத்திசையும் கவர்ந்தே - எவ்வுயிர்க்கும்
இன்பம் பயப்பனவாய்
இத்தரையில் மலரும் - பூக்கள் புகழ்
என்னென்(று) உரைப்பதடி!

நல்ல தலைவர்களும் - உலகிடை
நற்றமிழ் வித்தகரும் 
முல்லை இனத்தவரென்(று) - இயம்பிடல்
முற்றிலும் உண்மையடி!

பூமியில் நல்லவர்கள் - முல்லைகளைப் 
போன்றவர் என்போமடி! 
நாமிதை நன்குணர்ந்தால் - உலகெங்கும் 
நன்மை மணக்குமடி!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)