Poor motherபிறந்ததே ஒரு போரில்தான்
வைக்கோல் போரில்
கழுவப்பட்டேன் வாய்க்கால் நீரில்
வளர்க்கப்பட்டேன் வயக்காட்டின் வரப்பில்

கூலிக்கு மார் அடித்தது போக 
ஒரு கருங்காலிக்கு பாய்விரித்த பாவம்
என் பிறப்புக்கு வித்திட்டாள் தாயும்
பழி சொல்லுக்கு ஆளானாள் நாளும்

நெற்பயிரை தொட்டதுண்டு
போரடித்து அரிசி கண்டதுண்டு
ஆனால் அது வெந்ததைத்தான்
தினம் உண்டதில்லை

ஒருவேளை கஞ்சிக்கு தன்
உடல் பொருள் ஆவி அனைத்தும்
இழந்து நின்றாள் என் தாய்
என் பொருட்டு அதுவும்

ஆறாய் வேர்வை கொட்ட
போராய் துணிகள் துவைத்து
ஓடாய் ஒதுங்கி நிற்பாள்
பழந்துணிகள் கேட்டு பெற

மாற்று சேலை கொடுத்தாலும்
வாங்க மறுப்பாள் பதிலுக்கு
மேல்சட்டை கால்சட்டை 
கேட்டு நிற்பாள் எனக்கு

பாடுபட்டு எனை வளர்த்து
பள்ளிக்கு போ என்றாள் அன்போடு
போகமாட்டேன் - உன் உடன் உழைத்து
உயர்த்திடுவேன் உனக்கு ஓய்வளித்து

படிப்புக்கு மட்டும் இல்லை மகனே
ஒருவேளை சத்துணவு கிடைக்கும் உனக்கு
என்றுரைத்து விக்கி நின்றாள்- என்
உடல் விரைத்து கல்லாய் போனேன்

தாயே எனை பேணி வளர்க்க
முயற்சித்தாயே
உனை பிணி வளர்க்க
எனை பிரிந்தாயே

தாயே உன் முயற்சி 
தோற்றதம்மா 
உன் வாரிசு நான் என
வேலையில் இறங்கிவிட்டேனம்மா

இருப்பினும் தாயே
உயர்வேன் ஒருநாள்
என் உழைப்பின் பலனால்
உன் லட்சிய கனவாய்
இருப்பேன் பலநாள்.........

சுரேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)