Cauvery River

(நேரிசை வெண்பா)

ஆறுகளே! நாட்டுக்(கு) அணிகலனாய் வாய்த்திருக்கும்
பேறுகளே! உம்மால் பெருந்துயரே! – வீறுகொளாக்
கோழைத் தமிழோர் குறைபா(டு) அறியாதே
நீள நடக்கின்றீர் ‘நீர்’!...

மணற்கொள்ளை என்னும் மதிகேட்டின் உச்சம்
கணக்கில்லை யன்றோ,எம் கண்முன்! – மணக்கும்
நதிநீர் உயிருக்கு நாச(ம்)விளை விக்கும்
கதிகேட்டைக் கண்டிலரோ, நீர்?

நன்னடத்தைப் பொன்னியாம் நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார் – இந் நடத்தை
ஏற்புடைத்தோ என்றெழும் எம்மோர் குமுறலெல்லாம்
கேட்பதுண்டோ உங்கள் செவிக்கு?

பாலாற்றை எம்முன்னே பாழாறாய் ஓடவைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார் – நூலாய்
இளைக்கும் உழவர்தமை ஏறெடுத்தும் பாராப்
பழிக்(கு)இங்கே என்ன பதில்?

எல்லைப் புறத்திருக்கும் எங்கள்நீர் ஆதாரம்
முல்லைப் பெரியாற்றின் மூச்சடைத்துத் – தொல்லை
புரிகின்ற ‘தோழர்’களின் புல்லறிவாண் மைக்குப்
புரிந்துகொண் டீரோ பொருள்?

மழைநீர் பெருகின் மதகுதிறக் கின்றார்…
பிழைவானம் பொய்க்குங்கால் பேணார்…– விளைநிலமோ
வெட்டவெளி யாhனபின்பும் வெள்ளம்தாரார்… நீவிர்
உற்றபுகழ்க்(கு) உண்டோ பொருள்?

நதிநீர்ப்பங் கீட்டு நடுவர்மன்றம் இன்றோர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்(று)! – எதுசொலினும்
கேட்காது, தீர்ப்பும் கிடைக்கா(து)!... உரிமைகளை
மீட்கவழி வேறுண்டோ, மேல்?

எம்மவர்க்கு எட்டும்நீர் எட்டா(து) உமைத்தடுத்து,
வன்முறைக்கு மேலும் வழிவகுத்து, – உம்மீ(து)
அணைமேல் அணைசெய்(து) அடைக்கும் கொடுமைக்(கு)
இணையேதும் உண்டோ இவண்?

முலைசுரந்(து) பால்வார்க்கும் முன்னறி தெய்வம்போல்
அலைசொரிந்து எம்கூழ் அளக்கும் – விலைகடந்த
ஆறுகளே, நீவிர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்கிங்(கு) ஆர்?

பொழிலொடு,பூங் காற்றும் புடைசூழப் பூமீ(து)
எழில்நடையாய் ஏகும் நதிகாள்! – விழிபடரும்
கண்ணீர் துடைக்கும் கருத்திலையோ? எத்தனைநாள்
தண்ணீர் படைக்கும் தடை? 

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)