வடக்கிலிருந்து வந்தது.
தெற்கைத் தேய்க்குது.
வடக்கை நல்ல திசையாக்கி,
எமதிசை தெற்கு என்று -
பச்சரிசி கொட்டிய வாழை இலைபோல்
மொத்தச் சிரிப்பையும் முதல்போட்டுச் சிரிக்குது.
தான் போகவர மட்டும் வசதியாய்
பலரும் கிளம்ப விரும்பாதிருக்க
பொய்ப் புசுவாண வேட்டுகள்
காலக் கணக்கில் வைத்தது.
நம்பிய தெற்கின் நாள்காட்டிகூட
நாளும் நாளும் மூடத்தனத்தின்
முடைமிகு நாற்றம் பெருக்குது.
புகழும் பணமும் குவிக்கும்
ஒவ்வோர் அங்குலமும் தங்கநகைபோல்
அலங்கரிக்கும் நாளேடும்கூட
வெட்கமில்லாமல்
மூடம்பரப்பத் தொடங்கிவிட்டது.
காரணம் காசு,
காசு, காசு - இன்னும் காசு...
"பிள்ளைவாள்! முதலியார்வாள்!!"--
வாளெடுத்து மனிதம் வெட்டுது.
ஞாயம் சொல்லும்
பாணியில் கோமாளி
இலச்சினை பொறித்த
ஆனந்த இதழ்தான்
வடக்கு வாசலை விரியத் திறந்து
தெற்கு இருப்பை 'நொட்டை' எடுக்குது.
என்ன செய்ய? என்ன செய்ய!
என்ன செய்தாலும் இந்த
சிவப்பு மூஞ்சூறு
பிழைக்க வந்த இடத்திலும்
கொழுப்புப் பிடித்துக் கோணலாய் முறைக்குதே.


தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)