முகமறியாத் தோழனே!
ஈழபூமியில் உயிர் கிழித்தெறியப்படும்
தமிழ் உறவுகளுக்காக
உன்னையே
நெருப்பிட்டு கருக்கிவிட்டாயா...?

உனது மரணத்தின் காலடியில்
மண்டியிடுகிறேன் தோழா.
ஆயிரமாயிரம்
அழகிய கனவுகளைச் சுமந்த
சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளைக்கூட
பீரங்கி வைத்துச் சிதைக்கிறது அங்கொரு அரசு
அயலில் இருந்தும் எட்டிக் குரல் கொடுக்க
எந்தத் திராணியுமற்று
பழம்பெருமை பேசுகிறது தமிழக அரசு
தமிழகத் தமிழனின் குரல்களோ
சுரமிழந்து சுருங்கிப் போகிறது
குட்டிக்குட்டி பங்காளி அரசியலுக்குள்.

மத்தியஸ்தம் என்று
முண்டாசு கட்டிக்கொண்டு ஓடிய நோர்வே
தனது ஆயுதக்கடையின்
சிறந்த
வாடிக்கையாளனாக்கிக் கொண்டது இலங்கையை.
“தமிழனைக் கொல்கிறாயா...?
இந்தா பிடி இன்னும் தருகிறேன்
கவசவண்டிகளும் பீரங்கிகளும்” என்று
அள்ளிக் கொடுக்கிறது மத்திய அரசு

தாயகத்தை விட்டு பனித்தேசங்களில்
விட்டெறியப்பட்ட நாமோ
இன்னமும்
இந்திய அரிசி பருப்பு
மஞ்சள் குங்குமம் சட்டி பானை முதற்கொண்டு
மணவறை சப்பறம் மாப்பிள்ளைத் தலைப்பாகை
பட்டோடு பத்தும் உட்பட
சினிமாச் சி.டி பலவர்ண தமிழ் சேனல் வரை
விட்டகலா அடிமைகளாகிப் போயினோம்.
தோழா!
எல்லோரது கையாலாகாத்தனத்தின் முகத்திலும்
ஓங்கியறைந்து
வெட்கித் தலைகுனிய வைக்கிறது உனது மரணம்

இன்னுமொரு அச்சமும்
எழத்தான் செய்கிறது.
உனது தியாகத்தை
தமது
கட்டுப்பெட்டி அரசியலுக்குள் குத்தகையெடுக்க
சொந்தம் கொண்டாடி முண்டியடித்து
ஓடி வருவாரே இனி தமிழக அரசியல்வாதிகள்.

எத்தனையெத்தனை
அழகிய
இளம் கனவுகளை
சுமந்து நடந்திருப்பாய்
நெருப்பிலிட்டெரிக்கவோ
வளர்த்தாய் தோழா
உன்னிளம் கனவுகளை?!

”விதியே விதியே
என் செய்ய நினைத்திட்டாய்
என் தமிழ்ச் சாதியை” என்று
மரண சாசனம் வரைந்து விட்டு
விதியின் முகத்தில் மட்டுமா அறைந்தாய் தோழா
இல்லை
மனுநீதியின் பிடரியிலும்கூட
ஓங்கி அறைந்துவிட்டது உன் துணிவு.
ஈழத்தமிழர் ஒவ்வொருவர் பெயராலும்
உனது மரணத்தின் காலடியில்
மீண்டும்
மண்டியிட்டெழுகின்றேன் தோழா.

பானுபாரதி, நோர்வே இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.