57 மணி நேரம், 30 வினாடிகள் தொடர்ச்சியான தெரு நாடகம் நடத்தி சாதனை புரிந்து "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவர் சித்திரசேனன். 25 வயதுள்ள இந்த இளைஞர், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவருடைய கிராமத்தில் நடக்க அவருக்கு உரிமை இல்லாமல் போய்விட்டது! இவருடைய சொந்த ஊர், மதுரையில் உள்ள நாட்டார்மங்கலம். அவர் தமது சொந்த வீட்டுக்குச் செல்ல, அக்கிராமத்தில் உள்ள பிரதான சாலையைப் பயன்படுத்த முடியாது. எனவே, ஒவ்வொரு முறையும் அவர் அந்தக் கிராமத்தைச் சுற்றிதான் சென்றாக வேண்டும்.

Chithrasenan சித்திரசேனன் தேநீர்க் கடையில் தேநீர் குடிக்க வேண்டும் என்றாலும், அவருக்குத் தனிக்குவளைதான் வழங்கப்படும். அதைக் குடித்துவிட்டு, அவரே அதைக் கழுவி வைக்க வேண்டும். கோயிலில் சாமி கும்பிட வேண்டும் என்றாலும், அவருடைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் செய்வதுபோல, கோயிலின் பின்புறம் உள்ள ஓட்டை வழியாகத்தான் சாமி கும்பிட முடியும். அதற்கும் அங்கு தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுக் கொலை, படிப்பறிவின்மை, சாதிப் பிரச்சினை போன்ற சமூகப் பிரச்சினைகளை மைய்யப்படுத்தி, நாங்கள் போட்ட வீதி நாடகங்கள்தான் எங்களுக்கு உலகளவில் மரியாதையை வாங்கிக் கொடுத்தது'' என்கிறார் சித்திரசேனன். ஆனால், இந்த நாடகங்கள் எல்லாம் எந்த வகையிலும் சாதி இந்துக்களைப் பாதிக்கவில்லை. “கின்னஸ் புத்தகத்தில் என்னுடைய சாதனைகள் பதிவாகியிருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்குப் பிறகு என்னுடைய கிராமத்தில் என்னை மதிப்பார்கள்; தீண்டாமை பார்க்க மாட்டார்கள் என்று நம்பினேன். ஆனால், உண்மையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை'' என்கிறார் சித்திரசேனன்.

நாட்டார்மங்கலம் அண்மைக் காலமாக சாதி ஒடுக்குமுறைக்குப் பெயர்போன கிராமம். இங்குதான் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்துத் தலைவராக ஒரு தலித் வரவே முடியாத சூழல் தொடர்கிறது. சித்திரசேனனின் கின்னஸ் சாதனைச் சான்றிதழ்களைப் பார்த்த சாதி இந்துக்கள், “உன் சர்ட்டிபிகேட்டை நீயே வச்சுக்கோ; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனே வந்தாலும் நாங்க அவரை இந்தத் தெருவில நடக்கவிட மாட்டோம்'' என்றனர்.

சிறந்த நாட்டுப்புறப் பாடகரும், பாடலாசியரும், நடிகருமான சித்திரசேனன், கிராமத்தைவிட்டு வெளியேறி சென்னை வந்திருக்கிறார். இங்காவது தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்திருந்தார். ஆனால், இங்கு யாரைப் பார்ப்பது, யாரிடம் பேசுவது என்று தெரியாமல் திகைத்திருக்கிறார். கின்னஸ் சான்றிதழை வைத்துக் கொண்டு நாடகத் துறையில் ஏதாவது பெரிய வாய்ப்பு கிடைக்கும் என அலைந்திருக்கிறார். ஆனால், எதுவும் நடந்தபாடில்லை. நீண்ட நாட்கள் சென்னையில் இருந்து வேலை தேட முடியவில்லை. கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சுவரொட்டி ஒட்டுவது, வெல்டிங் செய்வது, சரக்கு ஏற்றி இறக்குவது என காலத்தைக் கழித்திருக்கிறார். கிராமத்தில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு அவர் ஏதாவது உதவி செய்தாக வேண்டும்.

ஆனால், நாடகத் துறையில் இருந்து முழுவதுமாக தனிமைப்பட்டு நிற்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, கொஞ்சம் பணம் சேர்ந்ததும், நாடகப் பட்டறை என்ற அமைப்பில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். அந்தப் பட்டறையின் இயக்குநர் ஜெயா ராவ், “ஒரு சிறந்த கலைஞர் எங்களுடன் இருப்பதில் எங்களுக்குப் பெருமைதான்'' என்கிறார்.

தற்பொழுது ஆசியர் பயிற்சிக்குப் பதிவு செய்திருக்கும் சித்திரசேனன், மாலை நேரங்களை நாடகத்திற்காகவே ஒதுக்கி வருகிறார். “பாட்டும், நடிப்பும் இல்லாமல் சித்திரசேனன் இல்லை'' எனப் பெருமை பொங்கச் சொல்லும் இவர், “இந்தத் தடைகளை எல்லாம் கடந்து, நான் ஒரு நாள் மிகப் பெரிய சாதனை படைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்கிறார் உறுதியுடன். இச்செய்தியை, "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு (30.11.2005) பதிவு செய்துள்ளது.

Pin It