எப்பொழுதும் போல
அந்த சூரியன்
அழகுற ஒளிர்ந்து
யாவையும்
விழிக்க வைத்தது.
தென்றல் தீண்டிவந்த
தடாகத் திவலைகள்
அதிகாலையைக் குளிர்வித்தது.
அநேக கீச்சொலிகள்
அந்தந்த பறவைகளின்
இருப்புகளை உறுதி செய்தது.
திரள் மேகங்கள்
திசையெங்கும்
சிலது நகர்ந்தது.
பலது யோசித்தது.
நாய் மனிதர்கள்
வீதிகளை நாசமிடுவதும்
நடந்தேறியது.
வீடுகளில்
பால்காரர்களின்
வினோத அழைத்தலும்
கேட்டது.
பூனையின் தாவலுக்கும்
நாயின் குரைத்தலுக்கும்
இடையில்
கோலமிடும் பெண்ணைக் காண
குறும்பர்களின்
பிரசன்னமும் இருந்தது.
இரவாடைகளை நனைத்துக்
காய வைத்ததில்
சொட்டும் நீரில்
பூமியும் சுகம் கண்டது.
அஃதெப்படி
நண்பா
எப்பொழுதும் போல
யாவும்
நடந்தேறிய பொழுதும்
செவ்வாய்க்கு மட்டும்
உன் திருவாய்
துரோகம் செய்தது.
கிழமை
தோச கிரகச்சாரத்தில்.
- ரவி அல்லது