நமக்கிடையிலான தொலைவின்
அனல் பெருகி
வெக்கையாய் வழிகிறது பொழுது.
புளியம்பூ நிறத்தில்
மலரும் இந்த அந்தி
உன் வாசனையில்
ஊறிய தாவணியாய்ப்
படிகிறது நிலத்தில்...
மேற்கில் மின்னும் ஒரு துளி தாரகை
உன் மூக்குத்தியாகிடும்
கனவில் ஒளிர்கிறது.
அந்திசாயும் போதெல்லாம்
நினைவின் நெஞ்சில் சாய்கிறாய்,
மொழியில் நிறப் பிரிகைத்
தூரிகையாகிறது.
அந்தி அந்தியாக இல்லாமல்
பாறையாகக் கிடக்கிறது
காதலின் ஈரங்களைச் சுமந்து,
நீயற்ற இரவைக் கடப்பது
அவ்வளவு எளிதல்லவே.

- சதீஷ் குமரன்

Pin It