கிழக்கு வெளுப்பதற்குள்
மனதின் ரகசிய அலாரம்
ஒலிக்கிறது

நாங்கள் சமையல்கட்டில்
நுழையும் வேளைகளில்
சங்கீத விமர்சனம்
செய்து கொண்டிருக்கிறீர்கள்

ஏவுகணைகளின் விஞ்ஞானத்தை
நீங்கள்
சிலாகித்துக் கொண்டிருக்கும்போது
கொதித்த சோற்றை
வடித்துக் கொண்டிருப்போம்

தேநீர்க் கடைகளில்
நீங்கள் விவாதிக்கும் போது
பாத்திரங்கள் பேசுவதை
மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்போம்

அடுப்பங்கரை நெருப்பு
எங்களுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
தருணங்களில்
பூக்களின் வாசத்தை சுவாசித்தபடி
நடைபயிற்சியில் இருக்கிறீர்கள்

வெட்டியும் நறுக்கியும்
இடித்தும் பொடித்தும்
பக்குவமாகச் சமையல் நடக்கையில்
முகமூடிகளைக் களைவதற்குப் பதிலாக
கன்னத்தில் சவரம் செய்கிறீர்கள்

உங்கள் வம்சத்தை விருத்தி செய்ய
உயிர் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்
மரத்தின் வளையங்களைப் போல
வயிற்று ரேகைகளை வைத்து
ஆண்டுகளை
சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்

பேரலைகளாக உருவெடுத்து
ஊருக்குள் நுழையாத
பெருங்கடல் போல
கௌரவிக்கத் தவறிய சமூகத்தை
அமைதியாகக் கடந்து செல்கிறோம்

- முனைவர் மஞ்சுளா