சத்தம் தொடர்ந்தது
சிறகடிப்போ கை உதறலோ
காதுக்கொரு பார்வை
இசைபட சிணுங்கும்
பசித்திட பதறும் தலைகீழ் தவம்
மல்லாந்த சவம்
எல்லாம் புரிந்தும்
எல்லை தாண்டியிருந்தது யுகம்
ஓடி ஒளியத் தோன்றும் உள்ளொன்று
புலம்பும் உயிர் வதைக்கு
தோல் நிறம் சிவப்பா
சொல்லொணா சொர்க்கம்
கழுத்து நிரம்பும்
அங்குமிங்கும் அலையும் அறிவை
காலம் தொலைக்கும்
நமநமப்பில் நளினம் கொண்டு
நர்த்தனத்தில் தாவும் கற்பனைக்கு
தாகம் எனப் பெயர்
கதவு திறந்ததும் தட்டுத் தடுமாறி
தவித்தோருக்கு அது கரப்பான்
கதவு திறக்க கண்கள் விரிந்த
எனக்கு அது காஃப்கா

- கவிஜி