அது பொய்களைத் தின்னும்
தேசம்.

அங்கே
கடை வீதி,
அங்காடி,
பேரங்காடிகள் தோறும்
பொய்கள் கொட்டிக் கிடந்தன
கூறு கட்டிய பொய்கள்
சில்லறை விற்பனையில்...

அச்செழுத்தில்
குறு, சிறு திரைக் காட்சிகளில்
வசதிக்கேற்ப
வகை வகையாகக்
கிட்டும் பொய்களில்
குழம்பும் கூட்டும்.
கொறிக்க, பருகிடச்
சில்லறைப் பொய்கள்

புள்ளி விபரங்கள்
ஆய்வறிக்கைகள்
என நிரம்பி வழியும்
கருவூலப் பொய்களால்
அரண்மனையும்
அந்தப்புரமும்
அல்லக்கைகளின்
கூடாரங்களும்
எப்போதும்
நிறைவாகப் பசியாறின

ஒருவேளை கூட
வயிற்றுக்கிலா
வறுமைக்கு
அரசரின் அறிக்கைகள்
தண்டோரா வாசிப்புகளால்
வழங்கப்பட்டன
பொய்களின் பொதி

குடிமக்கள்
குறைதீர்க்கும் கோமான்கள்
வாரி இறைத்த
பொய்களைப் பொறுக்க
வீதிகள் தோறும்
கைகலப்பு
குத்து வெட்டு
உயிர்ப்பலி
எனத் தொடரும் சோகம்

அங்கே...
பொய்களைத் தின்று
ஜீரணிக்கத் தெரியாத
குழப்பத்தில்
உண்மைகளைத் தேடி
நான்.

- மலையருவி