எனக்கான
ஒரு சிலையை
சிற்பியாக இருந்து
நானே செதுக்குகிறேன்
சிலையின் பீடத்தையும்
தனியொருவனாக வடிவமைக்கிறேன்
சிலையைச் சுற்றிலும்
சுவர்கள் எழுப்புகிறேன்
கிழக்கு நோக்கிய வாசலையும்
நிருமாணிக்கிறேன்
மேற்கூரையை
கற்களால் கட்டமைக்கிறேன்
பிரகாரம் சுற்றிலும்
புத்தம் புது விதைகளைத் தூவி
புராதன மரங்களை
வளர்க்க எத்தனிக்கிறேன்
வேற்றுக்கிரகவாசி ஒருவனை
அர்ச்சகனாக நியமிக்கிறேன்
நிரம்பி வழியும்
உண்டியல் காசுகளை
ஆதி வனத்தில் புதைக்கிறேன்
உலகப் பற்று அறுபடுவதாக
மிதக்கின்ற ஒருநாள் இரவு
என் கோயிலை
யாரும் அறியாமல்
சிதைத்து மகிழ்கிறேன்
என்னை நாத்திகன்
எனப் பிரகடனப்படுத்தி
சிறையில் அடையுங்கள்
தேசத்துரோகி பட்டத்தைக்
கொச்சைப்படுத்தாமல்
உங்களிடமே
பத்திரப்படுத்துங்கள்.

- ப.சுடலைமணி