சாணக்கியம் தன்னைத்தானே
கிழித்துக் கொள்கிறது
பீறிட்டு சொட்டுகிறது அரசியல் மானம்
தவறுகள் தூக்கிட்டு மடிகின்றன
நிர்பயங்கள் ஜாக்கிரதை
திரும்பும் பக்கமெல்லாம் மரண பயம்
திரும்பாத பக்கமும் அதே பயம்
திக்கு தெரியாத காட்டில் இன்றென்பது
என்ன செய்யும்
தேகமற்ற தீவிரத்தில் கடவுள்தனம்
தன்னைக் கொய்யும்
ஒப்பனக்கார வீதியிலும் ஒப்பனையின்றி
அலையலாம் கோவிட் கற்பனை
ஆளாளுக்கு அறிவுரை சொல்லும்
ஆட்களெல்லாம் அநியாய நல்லவர்கள்
ஆண்ட பரம்பரையெல்லாம் மீசை முறுக்கி
கத்தி தூக்கி காத்திருக்கலாம்
ஒரு பப்பும் வேகாது ஒரு துப்பு தான்
புலம்பல்கள் தவிப்புகள் உளறல்கள்
எல்லாமே சகிக்க வேண்டி இருக்கிறது
சாமி கும்பிடுவோரெல்லாம் கும்புட்டுக்கோ
நாளை சாமிக்கும் பூட்டு போடப்படும்
ஜாதகம் கண்போரெல்லாம் காணலாம்
எட்டில் குருவும்.. ஒன்பதில்
கோவிந்தும் இருக்கலாம்
முகமற்ற நூலில் மூச்சுக்கு முன்னூறு செய்தி
அதில் முப்பது முக்கிய செய்தி
செத்தாலும் அதற்கு கவிதை எழுதும் நாங்கள்
ஏற்கனவே செத்தவர்கள்
ஏற்கனவே உயிர்த்தெழுந்தவர்கள்
உலகம் ஒரு நாடக மேடை தான்
இருப்பினும் சாவுக் காட்சிக்கு ஜகா வாங்கும்
இடைவேளையை
காலம் செய்து கொண்டிருக்கிறது
விசிலடித்து அடுத்த காட்சி செல்லும் முன்
வாய்ஸ் ஓவரில் ஒரு குறுங்கவிதை
"மெல்லூர்ந்து வரும் கோவிட் செல்லம்
நீ கைகால் முளைத்த காற்றா
கணுக்கால் அற்ற வேட்டா..."

- கவிஜி

Pin It