சில போது அவள் கண்களே
சொற்களாகி விடும்
வாசிக்கவும் முடியாமல்
வார்த்தெடுக்கவும் முடியாமல்
அவள் பாதையில்
கற்களாகி விடுவேன் நான்

சில போது அவள் பேச்சே
பூக்களாகி விடும்
மலர்ந்து விடவும் முடியாமல்
மலர்த்தி எடுக்கவும் முடியாமல்
அவள் செவியில்
வண்டிரைச்சலாகி விடுவேன் நான்

சிலபோது அவள் மௌனமே
கவிதை ஆகி விடும்
எழுதிடவும் முடியாமல்
எடுத்தியம்பவும் முடியாமல்
அவள் புன்னகையில்
விசும்பலாகி விடுவேன் நான்

சிலபோது அவள் அருகாமையே
சூனியம் ஆகி விடும்
மறைந்து போகவும் முடியாமல்
மறைய வைக்கவும் முடியாமல்
அவளைச் சுற்றி
வெற்றிடமாகி விடுவேன் நான்

- கவிஜி