ஒரு ரொட்டித் துண்டுக்காக
வானத்தை விற்றவனும்
நட்சத்திரங்களை நம்பி
தன் வீட்டின் சுடர்களை அணைத்தவனும்
சந்தித்துக் கொள்ளும்
ஒரு புள்ளியில்
அவர்களுக்கான பூமி களவாடப்பட்டு இருந்தது.

கண்மூடித்தனமான பக்தியில்
கடவுளே விற்கப்படுவது போல
தேசபக்தியின் பெயரால்தான்
தேசமும் விற்கப்படுகிறது.

போராட்டக்காரர்களின்
குரல்வளையில்
பதுங்கி இருந்த
துப்பாக்கித் தோட்டாக்கள் தான்
ஆள்பவர்களின் அதிகாரத்தை
உறுதி செய்கிறது.

கடல் அலைகளைத் தாண்டிய
கணக்கற்ற பொய்கள் தான்
ஆளுகிற தந்திரங்கள் என்று
ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமா
ஆராதனைகள்?
அரசியல் கூட்டங்களுக்கு
சென்று பாருங்கள்.

பக்தியைத் தாண்டி நிற்கிறது
பகுத்தறிவின் அர்ச்சனைகள்.

மின்விளக்குகளால் மறைக்கப்படுகின்றன
பௌர்ணமிப் பொழுதுகள்.

- அமீர் அப்பாஸ்

Pin It