மீன்களின் விழிகளும்
பறவைகளின் நிழலும் விரவி
பிரமாண்ட பட்டுப்புடவையென
பரவியிருந்த கண்மாய் நீர்
சுருங்கியது
ஒட்டுப்போட்ட துண்டுக்கோவணமாய்

வானம் பார்த்த நிலங்களில்
ஆங்காங்கே தென்பட்ட
பயிர்களையும்
கொறித்தழித்தன
தீனியற்றுப் போன
மஞ்ஞைகள் கூட்டம்

உணவும் நவவாழ்வும் நாடி
தஞ்சமடைந்த நகரிலிருந்து
எனை கைவிட்ட சாமிகளுக்கு
கொடையளிக்கவென
செல்லும்தோறும் காண்கிறேன்
தொலைகின்ற ஊரை

ஒவ்வொரு நாளும்
நினைவடுக்கில் அமிழ்கின்ற
பழவளவூரை தூசி துடைத்து,
மேலேயிருத்துகிறேன் ...
நினைவிலாவது அழிந்திடாமல்

- கா.சிவா