அறையெங்கும் வெளிச்சம்.
ஓடி ஓளிந்தது இருட்டு.
விளக்கின் அடியில்.

எட்டிப் பார்க்கும் என்னை
கொத்தி விட்டுப் போகிறது
குளத்தில் மீன்.

இதழ் ஒற்றி எடுத்தாய்
என் கைக்குட்டையில்
முளைத்ததொரு ரோஜா!

நிழல் தந்த மரம்
வாசலில் நிற்கிறது
வாயில் கதவாக.

பழுத்த பழம்
வேம்பாய் கசக்கிறது
வக்கிரச் செயல்கள்.

சிரிக்கும் காதலி
எனக்கென வெட்டினாள்
கன்னத்தில் குழி.

வாக்குகளின்
உச்சக்கட்ட ஏலம்
இடைத்தேர்தல்.

'அம்மண'மாக்கினேன்
தேவையற்றதை களைந்து
அழகாயிருந்தது மனம்.

- க.தமிழ் அரசன்