நீ
இருக்கும்
அத்துவானக் காட்டில்
கூட
தனித்தே நிற்கிறேன்
நான்!

காத்திருக்கும்
எனதிரு கண்களுக்குள்
கானல் நீரெனவே
காட்சியளித்து
கைகளுக்குள்
ஏன் அகப்படாதிருக்கிறாய்?

நெஞ்சமெல்லாம்
நிறைந்திருக்கும்
நேசமொழியின்
நெருடலை
எப்போதாவது
நீ
உணர்வாயா?

யுகாந்திரம்
யுகாந்திரமாய்
காய்ந்த வயிறோடு
காத்திருக்கும்
காயசண்டிகையின்
பசியோடிருக்கிறேன்
அட்சயப் பாத்திர
அமுதமேந்தி
நீ வருவதெப்போது?

முகவாய்
தூக்கி
ஒரே ஒரு முறை
முத்தமிட்டு
அணைத்ததை
எண்ணியெண்ணி
முப்பொழுதையும்
கழிக்கிறேன் நான்!

நேசத்தின் கனம்
தாங்காது
என் கணப்பொழுதெல்லாம்
மெல்ல கவிழ்வதேன்?
நீ
அணைக்கையில்
நான்
எரிவது
எவ்வகையில் சேர்த்தி
என்றறியாது
உயிர்தெழுகிறேன்
உனக்கே
உனக்காக...

நான்
சிறகு விரித்த
சிம்புட் பறவை!
நீயோ
எல்லையில்லா
என் பெருவானம்!

- இசைமலர்