என் ஊரில் வெயில் அடி
நான் உன் ஊரில்
மழை பெய்கிறேன்

ஆற்றோரம் சிப்பி தேடுகிறாய்
அசையும் சிற்பம் ஆங்காங்கே

நாமிருக்கும் ஜன்னலோரம்
வானம் நீளம்
அழியாது வானவில் நாளும்

நாணம் சரிய
காதில் கிசுகிசுக்கிறாய்
யாவும் சரிய உன் கம்மலில்
நான் அசைகிறேன்

மருதாணிக்கு சிவந்த விரல்கள்
மாமன் முறைக்கு வந்த தாவணி
நமக்கான ரகசியங்கள்

சோளக்காட்டில் திரியும் அணில்
உன் சேக்காலிப் பொண்ணு தெத்துப் பல்லு
நமக்கான சனி ஞாயிறு

முக்கால்வாசி கிணற்று நீரில்
மிதக்கும் நிலா நான்
உடன் அசையும் முழு இரவை
இணுங்கும் நட்சத்திரம் நீ

எழுதி விட்டு நீ அழிக்கும்
மணல் பேரில் மற்றவருக்குத்தான்
நான் அழிகிறேன்
மற்றபடி உன் உள்ளங்கையில் வளர்கிறேன்

ஒருத்திக்கு எதற்கு இரண்டு டிக்கட்
கேட்காமல் கேட்கும் நடத்துனர்க்கு
சொல்லாமல் சொல்லு
நாங்கள் இல்லாமல் இருக்கிறோம்....!

- கவிஜி