ஒரு சிறு வளைகோடு உப்பி
மண்புழுவாகிறது
ஈரப்பதமற்ற நிலம் மேலெழுகிறது
பச்சை நெற்கதிர்களுக்கு வண்ணமில்லை
பூச்சி மருந்து பாட்டிலுடன் உட்கார்ந்திருக்கும்
உழவனின் கைகளைப் பிடிக்க
அழுது புரள்கிறது மண்புழு.
பாம்புகள் இணைந்தாடிய
கரும்புத் தோட்டத்துக்கு வைத்த தீயில்
தோகைகளைப் பறக்க விட்டபடி
எழுந்து வருகிறாள் இளஞ்சூலி.
அவள் சுமந்து வரும் நீர்க்குடத்தை
மூன்று முறைக் கொத்தித் துளையிட்ட பின்
மண்புழு தேடி அலையும் காகம்
உழவனின் தலையில் கழிகிறது.
பொங்கும் சோளக்கொல்லை பொம்மை
இல்லாத முதுகெலும்பு தேடி
பின்னே மறைக்கிறது இடது கையை.
பொம்மையின் கண்களிலிலிருந்து
வழியும் வைக்கோலுக்கு
சண்டையிடும் மாடுகளை
விரட்டுகிறார்கள் சிறார்கள்.
கரும்புத் தோட்டத்திலிருந்து பரவிய தீயில்
கருகுகின்றன பனைமரங்கள்
யார் பசியும் எழுதப்படாமல்
வெடித்து விழும் பழங்கள்
நத்தைகளை நசுக்குகின்றன.

- இரா.கவியரசு