அவசரத்துக்கு முதுகில் தான்
முத்தமிடுகிறாய்
மிக அற்புதமான பொழுதுகளை
பின்னிருந்து தான் ஆசீர்வதிக்கிறாய்

பார்த்தாலே போதும் என்பாய்
பாதி ஆயுள் வந்திருக்கும்
பசித்த என் கண்களில்
மீதி ஆயுளை நிரப்புவதெல்லாம்
நட்சத்திர பூப்பறித்தல்கள்

விண்மீன்களை இணுங்கிச் செல்லும்
உன் நடைக்கு எடை ஏது
காத்திருக்கும் என் கண்களில்
தாளம் ராகம் பல்லவி

அள்ளி அணைத்திடவே உள்ளம் தான்
கள்வெறி கொள்ளுதடி
முணுமுணுக்கிறேன்
முக்கால்வாசி மூச்சில் உன் வாசம்

இருள் தேடி அலையும் நமக்கு
இசையாவதெல்லாம் முத்தங்கள் தான்
இலைமறைத்த கரும்வெளியில்
இஷ்டத்துக்கு தின்ற பின்
வயிறு புடைத்த காமம் வழியெல்லாம்

மேட்சுக்கு மேட்ச் எனும் போதெல்லாம்
நீ நீலம் நான் வெளிர்பச்சை
இருந்தும் ஆமா என்பேன்
நீயோ மாமா என்பாய்

மினுங்கும் சிரிப்பை
மிட்டாய் கைகளுக்குள் வைத்திருப்பாய்
பிசுபிசுக்கும் காதலை
அப்படியே தின்றிருப்பேன்

நான்கு நாள் சேர்ந்த மாதிரி
பிரிவு தாங்காது தான்
நங்கை உந்தன் நிழல் தேடும் எனக்கு
நாளெல்லாம் நீ கிடைத்தாலும்
போதாது தான்

சட்டென துக்கம் கவ்வும்
உனக்குள் தூரத்து பிறழ்வுகள்
சாகட்டும் கவலை என விரல் பிடிப்பேன்
குரல் உடையும் உனக்குள்
உயிர் உடையும் எனக்குள்

பிரிவொன்றின் நகர்வாய்
சாலை வெளிச்சங்களை
அள்ளி வரும் பேருந்து
நீ ஏறிய பிறகு
நிலவோடும் பயணிக்கிறது
என் நினைவோடும் பயணிக்கிறது.....!

- கவிஜி