சூரியனைச் சுருட்டி
சும்மாடு முடிந்து
உச்சந்தலையில் சூடி
தகிக்கும் கடுங்கோடையை
காலுக்குச் செருப்பின்றி
கடந்து வருகிறாள் பழக்கார
கருப்பாயி...

தசையின் சுருக்கத்தில்
உப்பு படிந்த வியர்வையோடு
வாழ்ந்து தீரவேண்டிய
மனதை
பத்திரமாய் சுருக்குப்பையில்
சொருகியிருக்கிறாள்

பழுத்த வாழ்வையும்
கனிந்த உழைப்பையும்
சீராய் அடுக்கி வைத்து
தன் காலத்தை தனித்து
தானே சுமந்து வருகிறாள் ..
நடுக்கமின்றி...

ஒரு கூடை வெப்பம் சுமந்து
காலார கடை விரிக்கிறாள்
உச்சி சூரியனை
உச்சந்தலையில் தாங்கி
தள்ளாடுகிறது காலம்
தளராத இவள் பாதங்கண்டு ..

பேத்தியும் பேரனும்
MBA Marketing management முடித்து
ஏக்கத்தில்
அயல் முதலீடு கம்பெனி வாசலில்
பன்னாட்டுப் பொருள்களை விற்கும்
உள்நாட்டுப் பட்டதாரிக் கூலிகளாய்
கனவுக் கூடுகளுடன்...
விதைகளின் கனவுகள் வெந்து வீழும் நிலத்தில்
வதைகள் வாதைகளுடன்
வழிந்தோடுகிறது காலம்
உலகமயக் கானல் வெப்பம்படிந்த
வீதிகளில்!

- சதீஷ் குமரன்