"எலும்பும் தோலுமாய்
பரட்டைப் பராரியாய்
பொத்தல் கிழிசலாடை
கோலத்தில்
மனம் பிறழ்ந்த மங்கையாய்
கோயில் வாசலில் கையேந்தி
நிற்கிறாள் தமிழ்ச்செல்வி
தன் பிள்ளைகளிடம்...

*

கருவறைக்குள்
சந்தனக்காப்பு பட்டுப்பாவாடை
நவமணி இரத்தினங்கள்
வண்டுகள் மொய்க்கும்
மலர் மாலை
மின்னணு ஒளித்தோரணையில்
மிகப் பாதுகாப்பாய்
அவர்களின் பாஷைகள்...
கலசத்திற்குள் தலைமுறை
வளர்க்க அவர்களின்
விதைகள்...

*

உச்சியில்
வட்டமடிக்கின்றன
வெண்கழுத்துப் பருந்துகள்.
கட்சிக் கொடிமரங்கள்
விழுங்கிய நிலத்தில்
விதைகள் தேடி
கூடடைய மரமின்றி
வெறுங்கூடுகளாய்
மண்ணிழந்த மரகதப்புறாக்கள்
அடைகாக்கின்றன
ஆட்சிக் கூடுகளில்
பருந்தின் முட்டைகளை ..!
வேர்களைச் சுரண்டுவதில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
சொல்லடி சிவசக்தி
யாதுமாகி நிற்பவளாமே நீ
யார் பக்கம் நிற்கிறாய்
சொல்லடி...

- சதீஷ் குமரன்