சிறு கற்கள் பரவியிருப்பினும்
சிற்றுயிர்கள் உயிர்த்திருக்கும்
நிலமாகவே தோன்றியது அது

கற்களை அகற்றிவிட்டு
நீரிட்டு பதமாக்கி
பதியனிட்ட மலர்ச் செடிகள்
இலைகள் சுருண்டு வாடி
என்னைக் கூம்பச் செய்தன

சிறிது உரமிட்டபின் நடப்பட்ட
பழமரக் கன்றுகள்
இலைகள் பழுத்துதிர்ந்து
என்னை வெம்ப வைத்தன

சில தினங்களுக்குப் பின்
அவ்விடத்தைக் கடந்த
என்னை
குருதி வழியக் கிழித்து,
நிலத்தின் தன்மையை உணர்த்தின
அதில் செழித்து வளர்ந்திருந்த திமிர்த்த முட்செடிகள்

- கா.சிவா