இழிவின் விளிம்பில் அசையும்
வலிகளின் இரணங்கள்
அவளது மேனியிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கிறது
துடிதுடிக்கச் செய்த கூட்டு வன்புணர்ச்சியால்

ஓன்றல்ல இரண்டல்ல
அநீதி இழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஆழ்கடலையும் தாண்டிச் செல்லும்
அப்பாவிகளின் அழுகுரல்கள்

பேரொலியெழுப்பியது
சமூக வலைதளங்களில் வந்துபோன அலறல் சத்தம்
அந்த குரலுக்குச் சொந்தக்காரி
இன்னாரென்று தெரியாமலே
இடிந்து வீழ்ந்தது தமிழகத்தின் தலைமுறைகள்

வஞ்சகத்தின் வதைகுழியில்
மரணித்த பெண்மையின் துயரமிது
“அண்ணா நம்பித்தானே வந்தேன்
பெல்ட்டால் அடிக்காதீர்கள்
நானே கழற்றிவிடுகிறேனெனும்” இரணங்களில்
அறுந்து வீழ்கிறது
நம்பிக்கை தகர்த்தெறிந்த
நயவஞ்சகர்களின் சதிவலைகள்

வன்மத்தை பசியாய் கொண்டலைந்த மிருகங்கள்
வலைதள செயலியில் உறவாடி உறவாடி
அப்பாவிப் பெண்களை இலாவகமாய் தன்வசப்படுத்தி
உயிராழத்தின் வேர்களில்
துரோக கத்தியால் குத்திக் கிழித்தெறிந்த அடக்குமுறைகள்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடந்தேறிய பாலியல் குற்றங்கள்
ஏழெட்டு வருடங்களாய்
எவரொருவருமறியாது
ஓரிடத்தில் குவிந்த இரகசியம்தான் என்ன?

ஆயிரக்கணக்கான பெண்களை
அம்மணமாக்கி வன்புணர்ந்த கொடூரங்கள்
குரல்வளை நெறிக்கும் வீடியோ காட்சிகளென
பூகம்பமாய் வெடித்துப் பரவுகிறது
பொள்ளாச்சி இரகசியங்கள்

மானுடமே
பெண்ணுடல் மீது தொடுக்கப்பட்ட
பேரவலத்தைக் கண்டு
இனியும் முகம் புதைத்து நழுவாதீர்கள்

உலகமே காறித் துப்பும் இழிசெயலில்
அம்பலப்பட்டு நிர்வாணமாய் தொங்குவது
பெண்ணின் உடல் அல்ல
ஆணாதிக்கத்தின் சர்வாதிகாரங்கள்

பெண்ணே
உன்னுடலை ஆயுதமாக்கு
அடக்கியாள விரையும்
விரைத்த குறியை வேரோடு அறுத்தெறி

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It