எப்போதெல்லாம் அடைபடுகிறதோ
அப்போதெல்லாம் தட்டு
பேசவிடாத சட்டங்களை
கேள்விகளின்றி உடைத்துப் போடு

மக்களிடையே பேசுவதை நிறுத்தாதே
அடி படலாம்
மக்களைப் பற்றி பேசுவதையும்
நிறுத்தாதே

வர்க்க பேதங்களுக்கு நடுவே
தாடிக்காரக் கலகக்காரர்கள்
பிறந்து கொண்டேயிருப்பார்கள்

வாதம் பிரதிவாதத்திற்குப் பயந்தவர்களே
கேள்விக்கும் பதிலுக்கும் இடையே
முட்டுச் சந்தில் நிற்கிறார்கள்

விஷம் வைத்த பிறகும்
தூக்கிலிடப்பட்ட பிறகும்
செருப்பால் அடிபட்ட பிறகும்
சிலுவையில் ஏற்றிய பிறகும்
தோட்டாக்களில் துளையிட்ட பிறகும்
கேட்க கேள்விகள் உண்டு நம்மிடையே

கடவுள் என்பதே தனிமனித
வழிபாடுதான்
கூனிக் கும்பிடுவது என்பதே
நீ அடிமை என்பதன் வெளிப்பாடு தான்

வன்முறைக்கு தன்முறை
அதுதான் என்றால்
எடு உன்முறையையும்

சாமி உன் கையில் இருந்தால்
சாதி உன் தலையில் அமரும்
காக்கா உட்கார
பன‌ மரம் விழும் கதை அது

சாமியைச் சாக விடு
சாதியும் செத்துப் போகும்
சாபம் இடு

நேர்படப் பேசுகையில்
கோடு விழத்தான் செய்யும்
கூர்படவும் பேசுகையில் ரோடும்
போட்டு விடலாம் நம்பு

முடிந்தால் தலைக்கு மேல் மனிதம் வை
தவம் கலைந்தாலும் எங்கெங்கும்
மரங்கள் வை

இனி எல்லாப் பாதைகளும்
ஒருபோதும் ரோம்க்கு அல்ல......!

- கவிஜி

Pin It