கோழியா மட்டனா
மீனா நானா
இது உன் ஞாயிறு

*
நீ காசு கொடுத்த பிறகு
பூம் பூம் மாட்டுக்காரன்
பூம் பூம் பாட்டுக்காரன்

*
நிஜமாய் சொல்
துணி துவைக்கவா வருகிறாய்
ஆற்றுக்கு ஆயுள் நிறைக்கத்தானே

*
உன் கண்களை அடக்க முடியாது
வேண்டுமானால்
உன் வீட்டுக் காளையை அடக்கலாம்

*
எவன் சொன்னது காந்தி வீதி என்று
நீ இருக்கும் வரை
அது விஷாந்தி வீதி

*
உன் கோலம் காண ஊர்
நீ கோலமிடுவதைக் காண
நான்

*
இடை நுழைந்த கைக்கு
காற்றின் விரல்கள்
மேலும் கீழும் இடி மின்னல்

*
யாரிடமும் சட்டென பேசி விடுகிறாய்
யாருக்கு வாய்த்திருக்கிறதோ
சட்டென பூத்து விட

*
நம் தெருவுக்கு
பூமத்திய ரேகை
உன் வீட்டில் தான் ஓடுகிறது

*
ஆனாலும் கொஞ்சம் அதிகம் தான்
உன் வீட்டில் இருப்பதாக நினைப்பு
பக்கத்து வீட்டுக்கு

*
தேநீர்க்காரன் ஐஸ்காரன்
காய்கறிக்காரன் எல்லாருமே
பூக்காரன் தான் உன் வீதியில்

- கவிஜி

Pin It