விஜி அம்மா ப்ரியா அம்மா
ஆனதில் இருந்து
ஆரம்பிக்கிறது கவிஜி காவியம்

அங்கே பாட்டிகளும்
தாத்தாக்களும் தான்
கதை மாந்தர்கள்

தனித்த இரவுகள் தான் கூடு
தாகத்துக்கு
தன் பெயர் தான் வீடு

எப்போதும் திமிரோடு அலையும்
ஒரு பைத்தியக்காரனைச்
சுற்றி தான் கதை நகர்கிறது

மனிதர்களின் மத்தியில்
தியேட்டர்களும்
காடுகளின் மத்தியில்
பறவைகளும் உப பாத்திரங்கள்

ராட்சசிகளின் வல்லமைகளோடு
தேவதைகளை
ரட்சித்துப் பார்ப்பது
எவ்வேளையும் விசில் பறக்கும் யுக்தி

எழுதுவதும் படிப்பதும்
புணர்வதும் பிறழ்வதும்
இடையிடையே சிறகு விரிக்கும்
தன்னையே சிரித்தும் வைக்கும்

காட்சி அமைப்புகள் உபயம்
தாஸ்தாவெஸ்கியையும்
காஃப்காவையும் தமிழன்
ஆக்கிய காவிய சிந்தனை தான்

தன்முனைப்பும் தவ உழைப்பும்
அதிகம் மிக அதிகம்
தானற்று இருக்கவும் அத்
திரைக்குத் தெரியும்

மெய் சிலிர்த்தால் அழுது விடும்
மெல்லிய திரைசீலைக்குப் பின் தான்
யூதராவும் நியாந்தாவும்
கபடி ஆடுவார்கள்

யாருமற்று இருக்க கற்றுக்
கொள்ள முடிந்த கதாபாத்திரத்தால்
கவிதை அற்று இருக்கமட்டும்
கற்றுக் கொள்ள முடியவில்லை

எதுவரைக்கும் என்று தெரியாது
அதுவரைக்கும் ஒரு போதும்
முற்றுப் பெறாது கவிஜி காவியம்...!

- கவிஜி