அலையலை யாய்வரும் ஆசை அடக்கி
அனுதினம் ஏழைகள் வாடுகிறார்- வீட்டின்
உலையை விடஅவர் உள்ள கொதித்திட
ஊமைக ளாகிக் கிடக்கின்றார்- வெயிலில்
இலைசரு காகி உதிர்வது போலே
ஏழ்மையில் வெந்து மடிகின்றார்- நாட்டில்
சிலைஉரு வாக்கிட.ச் செல்வம் கரைத்துச்
செருக்கினை ஆள்வோர் உயர்த்துகிறார்

கனவுகள் காண்பது ஆடம்பரம் காட்டில்
கடின உழைப்புகள் செய்வோர்க்கு- மனிதர்
அனலிடைப் பட்ட விறகுகள் போன்று
அலருகிறார் பாழும் வயிற்றுக்கு- ரோட்டில்
தினமொரு கற்சிலை தோன்றி வளருது
சாதியைத் தூக்கிச் சுமப்பதற்கு- அதை
சனங்களைக் கூட்டி வணங்க வருகிறார்
சொந்த நலன்களைக் காப்பதற்கு

தங்க இடமின்றி மக்கள் தவிக்கின்ற
தேசம் இதுவென்று தானறிந்தும்- சொக்கத்
தங்கக் கவசங்கள் செய்து கொடுக்குது
சாதித் தலைவரின் கற்சிலைக்கு- சோறு
பொங்க வழியின்றி ஏழை தவிக்கின்ற
பூமி இதுவென்று தானறிந்தும்- உலகம்
வெங்களத் தில்சிலை செய்து மகிழுது
வெட்கம் தவிர்த்து மனிதருக்கு

மாற்று உடையிலா மக்கள் பலர்வாழும்
மண்ணிது வென்று தெரிந்திருந்தும்- இங்கு
நேற்று இறந்தவர் கற்சிலை செய்ய
நிதியினை வாரி இறைப்பதுவோ!- தாம்
ஏற்ற தலைவரை ஏத்தி வணங்கிட
ஏழை பணத்தை அழிப்பதுவோ!- துர்
நாற்ற மடித்திடும் சாதிம தங்களை
நாட்டில் சிலைகளாய் ஆக்குவதோ!

அழுகாப் பிணமாம் சிலைகளைச் செய்து
அலங்கா ரமும்அதில் செய்வித்து - மனிதர்
தொழுது வணங்குதல் தொல்மட மையெனில்
துணிந்து எவரோ மறுப்பவரும்!- உழைப்பில்
மெழுகாய்த் தனையே உருக்க்கிடு வோர்க்கு
வறுமைத் துயரே கிடைக்கிறது- சிலருக்கு
மெழுகில் சிலைகளைச் செய்து அவற்றில்
மனிதம் மயங்கிக் கிடக்கிறது

சாமி சிலைகளைத் தூக்கும் திருடரும்
சாதிச் சிலையைத் தொடுவதில்லை- மக்கள்
ஊமைக ளாகக் கிடக்கும் பொழுதினில்
உண்மை என்றும் விழிப்பதில்லை- கொடுந்
தீமைள் செய்திடும் சாதி மதங்கள்
சிலைகள் வடிப்பதை விடுவதில்லை- இந்த
பூமி சிறந்திட சாதிகள் செத்திடப்
போட்டுடைப் போமே சிலைகளையே!

- மனோந்திரா