மரணப்படுக்கையில் மறக்காமல் 
சொல்ல வேண்டும் 
முன்பொரு முறை மரணித்ததை 
 
*
வல்லவனுக்கு மறதி வந்தபோது 
வாசுகியை வாசகியாக 
நினைத்திருப்பான் 
 
*
அந்தக் கைகளை 
இன்று வரை தெரியவில்லை 
அந்தப் போர்வைக்குள் 
நாங்கள் மூவர் இருந்தோம் 
 
*
கட்டாந்தரை தான் கவி பாடும் 
பருப்புச் சட்டி இல்லை
கம்பன் பொண்டாட்டி புலம்பல் 
 
*
எல்லாரும் சொல்லி அழுவது போலில்லை 
இரண்டு ரூபாய்க்கு 
அடி வெளுத்தவர்தான் தாத்தா
 
*
விழுந்து புரண்டு உருண்டு 
நன்றாக இருக்கிறது 
கல்லாக இருப்பது 
 
*
கடலாவது எப்படியோ 
கரையாவதும் அப்படித்தான் 
சிலையாகிப் பார் 
 
*
 
தீர்த்தக்கரை மலையடியில் 
தெற்கு மூலையில் கொட்டும் அருவி 
பார் அவனை பாரதி சாயல் 
 
*
மரணிப்பதைத் தவிர 
இதழ் முத்தம் பிடித்திருக்கிறது 
இளையராஜா இசையும் 
புன்னகை மன்னனுக்குத்தான் 
எத்தனை டேக்....
 
- கவிஜி