மணல் அள்ளி ஆற்று வயிற்றில் 
மண் அள்ளி போட்டோம் 
இடம் பொருளற்ற ஏவல் 
நீர் தடத்தில் மாடி வீடானது 
 
மரம் அழித்தோம் 
மரக்கூடுகள் பற்றிய கவலை 
எப்போது இருந்தது நமக்கு 
 
மடி நோகும் வரை மண் எடுத்தோம்
மண்ணே கடைசி வாய் சோறு என்பதை 
இப்படித்தான் மறந்தோம்  
 
நிலத்தடி நீரை குருதிக்கு நிறம் 
மாற்றினோம் 
காற்றின் இதயத்துக்கு கரி பூசினோம்
 
நீருக்கு நெருப்பாய் நின்றோம் 
இன்று நீருக்குள் நீராய் நின்றோம் 
 
மார்தட்டி வரலாறு பேசினோம் 
புவியியலை விட்டு விட்ட 
கணக்காளர்கள் நாம் 
 
நஞ்சுத்தனத்தை டி எம் சி களில் 
திறந்து விட்டோம் 
நல்ல தனத்தை எல்லைகளில் 
மறந்து விட்டோம் 
 
நதி ஆறு குட்டை குளம் 
வரைபடத்துக்குள் அடங்குமா 
அடங்கா மழை நீரை அடக்குமா
அவரவர் ஊரின் வரைபடம் 
 
தட்பவெப்ப நிலை மாற்றியதும்  
நாமே 
நுட்பக் கோளாறுகள் பூட்டியதும் நாமே 
 
சாலையில் எல்லாம் படகு போக 
படகில் எல்லாம் துயரம் போனது  
 
குறுக்கு சந்தெல்லாம் குறுகிய 
ஓடை ஆனது 
பெருத்த மனமெல்லாம் 
உடைவதில் துளிகள் கூடுது 
 
நீரெரியும் பிறகு ஊரெரிக்கும் 
என்பது நாம் கதைகளில் மட்டுமே 
அறிந்த பிசகு 
 
நீர் எரிய எண்ணெய் ஊற்றியது 
சுட்டாலும் நிஜம் 
நாம் ஆற்றிய பிசகு 
 
நீரின்றி அமையாது உலகு 
சரிதான் 
நீர் மட்டுமே இருந்தாலும் 
அமையாதே உலகு
 
எல்லாம் சரியாக என்னதான் செய்ய 
இறைவன் இல்லவே இல்லை  
என்பதை இப்படியா சொல்ல 
 
எல்லாவற்றையும் மாற்றி போட்டு 
நாம் செய்த விதிகள் தான்
சமன் செய்யும் இயற்கையின் 
எதிர்வினைகள் சற்றே அதிகம் தான்...!
 
- கவிஜி