அன்பை
உதாசீனஞ் செய்தலென்பது
அத்துனை எளிதல்லவே!

அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும் போது
கண்ணெதிர் நின்று பேசாது
விட்டம் வெறிக்க வேண்டும்!

அன்பிற்குரியோர்களை
உதாசீனஞ் செய்யும் போது
அவர்களது குரல்
உங்கள் காதுகளை தீண்டாத அளவிற்கு
இறுக மூடிக்கொள்ள வேண்டும்!

அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும் போது
உங்கள் மனதை
பூவென நெகிழ விடக்கூடாது
பாறையென இறுகச் செய்ய வேண்டும்!

அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும் போது
நடுங்குகின்ற அவர்களது கை
உங்களைத் தொடாத அளவிற்கு
தூரமாய் நிற்கவேண்டும்!

அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும் போது
பேசிய வார்த்தை...
நடந்த பாதை..
நெகிழ்ந்த பொழுதென
யாதொன்றையும் நினைவில் நிறுத்தக்கூடாது.
ஓயாது அவர்கள் கூறிய
ஒவ்வாத வார்த்தையொன்றை
நினைவிற்குள் நிறுத்திட வேண்டும்!

அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும் போது
அவர்களது நினைவை நம்முள்
நிறுத்துகிற பொருட்களை
நீக்குதல் வேண்டும்.
இல்லையேல்...
நொடிக்கொருமுறை
நினைவுகளின் நோவுகளை தந்து தொலைக்கும்!

இவற்றையெல்லாம்
செய்ய முடியவில்லையா?
நீங்களும்
என்னைப் போலவே
அன்பிற்குரியவர்களை
உதாசீனஞ் செய்யும்
தகுதியற்றவர்களாகிறீர்கள்!

அன்பு பலம்
அன்பு ஆயுட்பெருக்கி
அன்பு தவம்
அன்பு ஆயுதம்
அன்பு வாழ்வு
அன்பு தீராப்பெருஞ்சுனைநீர்
அன்பு ஆயுட்கால இம்சை
அன்பு உயிர்க்காற்று
அன்பு வலிமை!

- இசைமலர்

Pin It