ஒவ்வொரு ரயில் பயணத்திலும்
ஒரு விடுமுறை அகாலம்
இறுக்கிக் கொள்கிறது

உயிரைக் கையில் திணித்தபடி
ஒவ்வொரு முறையும்
கிளாலிக்கடல் கடக்கையில்
ஏவப்பட்ட கணைகளுக்கு
எனக்கான இலக்குத் தெரியவில்லை

இருந்தும் குளிர்கோடை
தன் தித்திப்பை
பொழியும் வெயிலில்
கரைத்துக் கொண்டிருக்கிறது

அரைவிலைக்கு வாங்கி
போர்த்திய குளிருடையில்
வலியுடன் நெகிழ்கிறது என்னூரின்

இலவம் பஞ்சுப்பொதி

நான் வெறும் ஐந்து சதத்தில்
ஒரு செர்ரிப்பழத்தில்
அதைப் பிழிந்து
அருந்திக் கொண்டிருந்தேன்

அதனால் என்ன
மின்மினிகளை சிறைப்படுத்திய

என் பயணம்
எனக்குப் போதுமாயிருந்தது

00

சிலந்திகள்
வனைந்து வனைந்து
பின்னிய தன் வலையில்
ஒரு போதும் சிக்குவதில்லை

ஆயிரம் தடவையாகவும்
சூழ்ச்சி இரவின்
விரிக்கின்ற வலைகளில்
விண்மீன்கள்
ஒரு முறையேனும்
வீழ்வதில்லை

தடம் புரளாத தண்டவாளத்தில்
விரிசல் கண்டு
தற்கொலை செய்யத் தெரியாத
எறும்புகள் வரிசைகட்டி ஊர்கின்றன

தீண்டாத முள் எனினும்
அதன் நீட்சியும் ஆட்சியும்
கோடி முகங்களின்
சிரிப்பின் சாயலில்
சற்றே விலகி நகர்ந்து
மலர்த்திய மரம்
வெட்டியும் சாயவில்லை

ஞானப் புத்தனுக்கும்
ஒரு காலத்தின் போதி
தேவையாயிருக்கிறது
வேம்பின் கசக்கும் தினங்களுக்குள்
நிழலின்றி தூங்கும் ஏதுமற்றவன்
சகலதும் சரிய தன்னில் கலந்திருந்தான்

கணக்கற்ற செலவொன்றில்
தனியே பெயர்த்தெடுக்கும்
உங்கள் உருக்களை
நீங்களே பத்திரப்படுத்துங்கள்

00

ஏரிக்கரையில்
வசிப்பவனும்
மலையுச்சியை நேசிக்காதவனல்லன்
நாணல் படலில்
தூக்கிலிட்டுக் கொள்ளும் வரை

வண்ணத்துப்பூச்சிகளுக்கும்
காரணத்தைச் சொல்ல
எந்த சிறகடிப்புகளுக்கும்
காற்று ஓவியம் வரைவதில்லை
ஆற்றில் மூழ்கிய

தூண்டிலேறிய புழுவின் தாகத்தை
ஆறுகளும் தீர்த்துக்கொள்ள
எந்த முகாந்திரமும் இல்லை
உண்மை அல்லாதது
பிழையானது
நேர் எதிரானது என்ற
நேர் மறை வினாக்களுக்கு
விடை காண அவசியமற்றது
என் மகளுக்கு

கதை சொல்லிக் கொண்டிருந்தேன்
அவள் முகத்தில்
ஆர்ப்பாட்டமான ஓர் ஆறு

ஓடிக் கொண்டிருக்கிறது.

00

உள்ளங்கை அபகரித்த
திவலைகளை
கொத்தி உடைத்தபடி
இருக்கிறது சடலக்கடல்
மூடிய கரைகளில்
ஒதுக்கிய நதியின் துளிர்த்த உயிர் வாடை
அள்ளிச் சரிந்த ஒரு துளி வானத்தில்
அலைபுரண்ட ஈரமொழி
கசிவற்ற கனிவற்ற
அதோ தினமும்
ஒரே கிளையில் வந்தமரும்
மைனாவை மார் துளைக்கும் கூரம்பு.

00

வாசனையாய் இருக்கும்
என் தேசத்தின் செவ்வானம்
எனக்குப் போதுமானது
என் பறவைகள் கழுத்தை
சுற்றி பரவசத்தை வாய் புரள
யாழென மீட்டிக் கொடுக்கின்றன
கேச இழையோடும் உயிரை
மாய்த்துக் கொள்ள புதையுண்ட பூமி
புகலிடமென விளைந்திருக்கின்றன
செவியுறா மேகப்புயலின் முனகலில்
பூமி சிராய்ப்புற அலாதியான தூவானம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக குவிகின்றன

முளைக்கத் தவறிய வேங்கை விதைகள்
செழித்திருக்கின்றன
இங்கு ஒரு போதும் இரவு வீழ்வதில்லை
ஏனெனில் படபடத்த முள்ளந்தண்டுக் கூடாய்
என் மரங்கள் நடுங்குவதில்லை

அதன் உள்ளங் கைக்குள் அடங்காத தம்பளப்பூச்சி

மெது மெதுவாக பாதை வரைகிறது
அப்பாலுற்றிருக்கும் இத்தருணத்தில்
ஈழத்தின் ஓர் எல்லையில்
நாட்காட்டி தாள்தாளாய் கிழித்துப் போட்டது.
என்னூருக்கு அது செல்வாக்கு.

00

என் சிறகுகளுக்குள்
அவளுக்கான கதகதப்பு
இன்னும் தீர்ந்த பாடில்லை
கட்டியமைக்கும்
ஒவ்வொரு சுள்ளிகளையும்
ஆயிரம் குழந்தைகளின்
மென் சுவாசத்தில்
நான் உணர்கிறேன்.
இருப்பினும்
வலி கனியும் அவள் புன்னகைக்கு
வாழ்நாளெல்லாம்
மொட்டவிழ்ந்தாலும்
என் உயிரற்ற வடிவத்தை
இக்கணத்திலும்
இதற்கு முந்திய கணத்திலும்
யாராலும் கருவுறுத்த முடியாது.
அவளுக்கான கதகதப்பை

பத்திரப்படுத்திய என் சிறகுகள்
ஈரமற்றதும் ஈரமானதுமான
கடல் அலைகள் போன்றவை
புலம்பெயர்க்கப்பட்ட
நானும் என் நிழலும்
துன்பங்களின் சேகரத்தினுள்
உயிர்த்தலுக்கான
ஒரு மறைவிடமென
எப்படி அறிவாள்
இன்ப அதிர்ச்சியான என் தேவதை.

00

ஆடுமா உச்சிக் கவண் கிளை
சுள்ளிகளை ஒவ்வொன்றாய்
எடுத்துச் சேர்க்கும் அக்காக்குருவி

மூடி வைத்த என் சுவடுகளை
கொத்திக் கிளறுகிறது தேன்சிட்டு

பூஞ்சதுர முடிச்சிட்டு
பசுமை படர்த்தியிருந்த
என் பறவை வயல்
ஊதிப்பெருத்த கனவு

செரித்திருக்கக் கூடுமோ
என் காதல் ரசம்
உறுத்துகிறாய் நீ
நேற்றைய தழும்பேறி

உணர்வு செத்துப்
பதுங்கி இருக்கிறது
உரக்கப் பேசிய என் துப்பாக்கி

நிரம்பித் ததும்புகிறது
எஞ்சிய சில மலைக்கணங்களின்
முற்றிய கசங்கல்கள்

ஸ்பரிச மொழியின் உச்சத்தில்
சப்தமின்றித் திறக்கும்
என் கவிதை மனம்.

00

நடுங்கிப் பாயும் நதியில்
மஞ்சள் வாசனை
சலசலக்கின்றன கற்பாறைகள்
எங்கோ பவளப்படுகை
தம்முள் நெய்கின்றன
சிப்பிக்குள் முத்தச்சுவடு

கூலி கேட்கிறது
சிநேகமாய் நெருடுகின்ற
நேசிப்பின் மொழி
உப்பும் முத்தும்

முந்திரிக்கடலில் ஒன்றாய் விளைந்தன

உருக்கமான வார்த்தைகள்
பொங்கச் சுனை புரண்ட
பனியின் ருசி
ஒருசேர இருகைகளிலும்
ஏந்திக் கொண்டிருந்தேன்
நீ நிலத்தின் நுனியிலேறி
நீந்திக் கொண்டிருந்தாய்

விரித்த நாளேட்டில்
குரல்வளை வரை புதையுண்டு
புடைத்த விதைகளில் வேரின் வரிகள்
இந்தக் காதல் கொழுத்த நாளுக்கு
என்னைப் பிடித்திருந்தது

00

முகிழ்க்கும் காலத்தில்
என் முகம் தேடி
கடலை சொடுக்குகின்றேன்
குமிழ்ந்தெழும் புனலுள்
புலரத்தெரியாத சூரியத்துகள்

தோகை விரித்த
இன்றைய பொழுதில் மிதக்கின்றன
ஆயிரம் தேன்சிட்டின்
வார்த்தைக் குஞ்சுகள்
மிதித்து விடாமல் நடக்கிறேன்

விற்க முடியாத என் நிழல்
என்னிடம் மீதமிருந்தது
மனிதபூமியை
மனப்புதரில் சிதற விட்டேன்
பின்னி விளையாடுகிறது
போலிப்பூ நிறைத்த தரு

யாருக்கு காத்திருக்கிறது
இக்காற்று
போதை முறிந்திருந்தது
தெளியும் போதெல்லாம்
இளைப்பாறிய
ஒரு பொட்டல் காடு

வெட்டி விடலாம் தான்
இந்த மனக்காட்டை
மிக மிக ரகசியமாய்.

00

கரம்ப நிலத்தின்
பச்சை வானத்தை மேய்ந்தபடி இருந்தவள்
கனவுகளின் வரண்ட கிண்ணங்களில்
மகவுகளின் புல்வெளிகளை நிறைக்கிறாள்

நிராகரிப்பின் பகல்களை
பனிப்புயலின் பால்வெளியிலும்
இலந்தைக்கனிகளின்
முட்கிழித்த ரத்தவடுக்களிலும்
திராட்சைச் சாறென
உயிர் பாய்ச்சத் தெரியும் அவளுக்கு

தன்னைக் களைவதில்
தன்னைக் கரைப்பதில் சங்கடமில்லையாயினும்
சக்கையாய் பிழிந்தெடுத்த செதில் உடலை

செவ்வக கடலுள் நீந்த விடுகிறாள்

மனிதர்களால் கொட்டப்பட்ட அக்கடலில்

உற்று உற்றுப் பாருங்கள்
பூச்சியங்களின் தோள்களில்
வேர் விளைந்தன
அவளது இரு சிறகுச் சொற்கள்

ஏனெனில் அவள் முகத்தில்
உளிமுனையின் செதுக்கலில்
இரு கிழிஞ்சல்கள்
அவளுக்கு நதி என்றும் பெயர்.

00

வந்து வந்து போகும்
வனப் பட்சி இறகுக்குள்
மிதக்கும் வானத்தின் நீல மொழி

காய்த்துக் கனியும்
இலையடர் விருட்சம்
அம்மாவிற்கு இணையான
தீண்டும் இச்சை

புல் தடுக்கி
வசீகரித்த குளுமையில் இழையோடும்
உயிர் நொடியின்
மூக்குத்திப் பூந்துணர்

வண்ணமேறிய ரயில் கையேந்திய
குட்டி தேவதையின் புன்னகையில்
தளும்பியிருக்கும்
என் மண்ணின் ஆற்று மொச்சை

00

முளைத்துக் கிளைத்த வாசலின் முன்
நின்று நனைகிறேன்
விழுதுகளை உலர்த்தின மௌன நதி
சின்னஞ்சிறு கிளையில்
தங்கியிருந்த ஒற்றை மழைத்துளி
நதியோர வளைவில்
காற்றின் சிறகெடுத்துப் பறந்தது
சரிந்த அந்தியின் உதட்டில்
இன்னொரு துளி
குமிழி உடைத்துச் சிதறியது
அதன் நீளமான குரல்
உப்புச்சாடிக்குள் உறைந்தது
ஏளனமாய் சிரித்துக் கொண்டே
இன்னொரு துளி
வெம்பாறைக்கிடையில் மறைந்திருந்தது
கிழிந்த வரைபடத்தில்
வண்ணங்கள் நிறம் மாற மாற
சிந்தியபடி இருந்தது
என்னைச் சிதைத்த ஒரு மழை.
ஆயிரம் கடல்கொள் வெளி
அடரும் என் ஆதி மரங்கள்
உதிரும் பல்லாயிரம் பூக்கள்.
அடையாளம் தொலைத்துவிட்டு

மறுபடி மறுபடி
தினமு‌ம் தேடி இந்தக் கிளைக்கு

வருவதில்லை அந்தப் பறவைகள்

00

என் பொறிவானத்தில்
சிறுத்தைகளின்
செங்குருதி வாசம்
பிரியங்களை
பெட்டியில் அடைத்தன

அம்மாவும்
அவள் அவிபுழுங்கலும்
காய்ந்த முற்றம்
புலுனிகளின் இரைச்சலால்
செவி குடைகின்றன

சகடைக்குண்டு கிழித்த
மலகூடக்கொய்யா
பதுங்குகுழி கட்டிய புளி
மறுபடி மறுபடி
எழுதிக் குலுங்கும்

பாதைவேலி வடலிகள்
முழு வலிகளையும் தாங்கி
இப்போது கல்லாய்
தேன்கள்ளு நிறைமுட்டிகளாய்
அன்பை முகிழ்க்கும்

பூவரசு வேலியை
அயலுறவு பேணி இடையில்
வைக்கவே இல்லை அப்பா
அத்தனையும் பெண்பனை
இப்போது அங்குமிங்குமாக
கனிந்துமிழும்

இதற்கு முன்
சாம்பல் பூத்த முகத்துடன்
என்னூருக்கு
சூரியன் வந்ததே இல்லை
வாழும் நிமிஷங்களை
பூமியில் பரப்பி
வண்ணத்தை புட்டிகளில்
நிரப்பினோம்

புத்தன் பிண உடலோடு
புணர்ந்த தடயங்கள்
பூமிக்கடியிலும்
இறுகக் கட்டப்பட்ட
வரலாற்றுக் கற்பிதம்

கள்ளத்தனமாகக் கூட
ஏற்றி வரமுடியவில்லை
என் மண்ணின்
அடிவயிற்றுக் கதகதப்பையும்
என் சூல்ப்பைக் குஞ்சுகளையும்

- தமிழ் உதயா, லண்டன்