நேற்றைய பொட்டலத்தை
பிரித்துப் பார்த்தேன்
புடைத்திருந்தன கொஞ்சம்
தூங்காத சொற்கள்,
உலரும் செதில் நாவுகளினுள்
கிளைத்த மான் கொம்பென
இன்னும் சில இருளின் ரேகைகளின்
முத்தமழுத்தி பதியமிட்டிருந்தன
குருதி சொரியும் இறகுகளும்
பூத்த நெருஞ்சிக் காடும்
நொதிக்கும் பிறைக்குழிவில்
நுரைத்த கடலில் ஒட்டித்தான் இருக்கின்றனவா
இறுக்கும் கயிறின் வெறுமையுறு குரலில்
சிரம் உயர்ந்திருக்கும்
இச்சிறை புதிதல்ல என்றாலும்
விழிகள் விகசித்து
மங்கத் தொடங்குகின்றன
வானம் எப்போதும் நீலமுடையதல்ல
நிர்வாண வெண்மையானது
நெட்டிருண்ட கறுப்பாலானது
என் சிறகடிப்புகள் துயிலற்றதென
இக்கணம் முதல் புலர்வு வரை பாடுவேன்
நெஞ்சில் பிணைவுற்றிருக்கும் நேயனே
வாதை நீங்கும் படியாக
கிளர்த்தும் முடிவுறாப் பாடலை
பரிகசித்துப் பகிர்
மாதுளைச் சுடரின் குருதிக் கறையென
என் புலன்களை கிளறிய
தருணங்களையும் நேசிக்கிறேன்
இன்னும் நேசித்த படியே இருக்கிறேன்
உறைந்து மிதக்கும் மூச்சின்
உயிரா நிழலா நீ சொல்

00 

மூடுபனியின் பரவசப்படுத்தலில்
இக்கணத்தை விசாலமாய் திறக்கிறேன்
அவை சிதறுண்ட கடற்கனிகளாய்
உலகின் நுனியில் வசியப்படுகின்றன
இன்னும் இரவுத் தாரகையில்
ஒளித்துக் கொண்டன
ஆதிநேசிப்பில் வெளித்தள்ளிய

நெஞ்சுவேர் முடிச்சு
துயர் பிழிந்த இறுதிச்சாறு
உணர்ச்சி ததும்ப வழிகிறது
அது மகிழ்கணமல்ல
என்பதை நான் அறிவேன்
வீடு விட்டுத் தொலைத்த உயிர்ச்செட்டையை
நாடோடியின் மூச்சுத் தேக்கத்தில்

அலசுகிறது பெருவனம்
திசையெறியும் கடல் முனையில்
நீள் வட்டப் படுக்கையில்
இத்தனை பரவசமாய்
அசையும் நீ
ஒளியா நிழலா உணர்வா எதுவோ
எவ்வாறெனச் சொல் 

00 

நடுங்கிப் பாயும் நதியில் மஞ்சள் வாசனை
சலசலக்கின்றன கற்பாறைகள்
எங்கோ பவளப்படுகை தம்முள் நெய்கின்றன
சிப்பிக்குள் முத்தச்சுவடு

கூலி கேட்கிறது
சிநேகமாய் நெருடுகின்ற நேசிப்பின் மொழி
உப்பும் முத்தும் முந்திரிக்கடலில்

ஒன்றாய் விளைந்தன

உருக்கமான வார்த்தைகள்
பொங்கச் சுனை புரண்ட பனியின் ருசி
ஒருசேர இருகைகளிலும் ஏந்திக் கொண்டிருந்தேன்
நீ நிலத்தின் நுனியிலேறி நீந்திக் கொண்டிருந்தாய்

விரித்த நாளேட்டில்
குரல்வளை வரை புதையுண்டு
புடைத்த விதைகளில் வேரின் வரிகள்
இந்தக் காதல் கொழுத்த நாளுக்கு
என்னைப் பிடித்திருந்தது 

00 

முகிழ்க்கும் காலத்தில்என் முகம் தேடி
கடலை சொடுக்குகின்றேன்
குமிழ்ந்தெழும் புனலுள்
புலரத்தெரியாத சூரியத்துகள்

தோகை விரித்த
இன்றைய பொழுதில் மிதக்கின்றன
ஆயிரம் தேன்சிட்டின் வார்த்தைக் குஞ்சுகள்
மிதித்து விடாமல் நடக்கிறேன்

விற்க முடியாத என் நிழல்
என்னிடம் மீதமிருந்தது
மனிதபூமியை மனப்புதரில் சிதற விட்டேன்
பின்னி விளையாடுகிறது
போலிப்பூ நிறைத்த தரு

யாருக்கு காத்திருக்கிறது இக்காற்று

போதை முறிந்திருந்தது
தெளியும் போதெல்லாம்
இளைப்பாறிய ஒரு பொட்டல் காடு

வெட்டி விடலாம் தான்
இந்த மனக்காட்டை மிக மிக ரகசியமாய். 

00 

கடல் மொழியின் கிளையில்
சிறகுகளை விரிக்கும் பறவையானேன்,
அருவியின் பரணில் காட்டை கூட்டி வரும்

இரவுச் சூரியனாகிறாய்,
நெய்தலா மருதமா
இரண்டுங்கெட்டான் நெருஞ்சி முட்பாதம்,
ஊதிப்பெருத்த கனவுள்ளும்
இன்னும் காயாத இரத்தப் பிசுபிசுப்பு,
பூச்சொரிய கிளம்பியது
கிளை பிரிந்த மரத்தின் துயர வாசம்,
ஆதிக்காட்டின் அன்பின் சுனை

ததும்பத் ததும்ப வசீகரித்த
ஆகாசத்தூறலில் ஈரமில்லை
பூமி முளைக்கவுமில்லை. 

00 

மனமுகட்டில் ஆதூரமாய் தேங்கியிருக்கும்
சாம்பல் மௌனத்தை பிழிந்து ஊற்றுகிறேன்.

தடாகத்தின் ஆழ்ந்த பனிசூழ் பரப்பில் அலைகின்ற
வழிப்போக்கனாய் இருக்கலாம்

ஆயினும் பறவையின் சிறகசைப்பாய்
செறிந்தெழும் பேரோசையோடு
வெளிச்சமாய் இருக்கிறேன்

பெருகிய மனித ஆற்றில் குரலற்ற பாறைகள்
நாநுனியில் பதுங்கி இருந்தன

அந்த மகா விருட்சத்தில் அர்த்தங்கள் விரியாத
ஊமைப் படபடப்புடன் இன்னும் மொட்டுச்சொற்கள்

மோனத்தவமிருந்து உயிர்சனித்த
என் கடற்பாசி முத்துக்களையும்
நீலச்சங்குகளையும் கடல் கொண்டால் என்ன 

00 

கலைவதும் கூடுவதுமாய்
இருந்த வெண்முகட்டுப் பளிங்குகளிடை
வெறுமனே மஞ்சள் ஒளியாய் மின்னுகிறாய்

சரிந்து கிடந்த மலையடிவாரத்தில்
அகாலத்தில் உஷ்ணமுறும் விலாத்தகடுகள்
மூங்கிலிடைத் துளைகளில் மூச்சிரைக்கின்றன

இருளின் நாணல் நுனிப்படலில்
வெண்பூக்கள் பூத்திருப்பதைக் கண்ணுறுகிறேன்
விரிந்திருக்கும் மாகடலின் சுழலும் உப்பேரிக்குள்

எரிமலைத்தாபத்தின் நதி திவலைகளாகின்றன

சப்தமெழுப்பும் ஈரத்தழும்புகள்
ஒலித்துடிப்பின் இடுக்குகளில்

நைந்துருகி வடிகின்றபோது

முத்தத்தின் கருச்சிதைவுகளை ஆழப் புதைக்கின்றன

கவனக்குவிப்பை
ஓர் ஆசுவாசமான ஊடறுப்பு தந்து விடக்கூடும்
செழித்த ரகசியங்களுள்

ஞானத்தின் வித்துக்களேயற்ற செடிகளன்றி
வேறு யாதுளது சொல்.

- தமிழ் உதயா, லண்டன்