பெரும் இடைவெளி அது 
அதில் தான் என் 
அத்தனை கனவுகளும் 
 
பேருந்தில் அடைத்தாலும் 
போதாத 
தீராத தூரங்கள் அவை 
 
கார்களில் நிரப்பிச் சென்றும் 
மிச்சமிருக்கும் இனம் புரியா 
பாரங்கள்
 
குதிரைப் பாதைகளை 
காலம் அடைத்து விட்டது 
குரங்கு வெளிகளை
பால்யம் சுமக்கிறது 
 
நீந்தி நிமிர வளைந்து 
நெளியும் ஆழியாரும் 
சோலையாரும் 
பரம்பிக்குளம் வரை 
செல்லும் அரூப ஆலாபனைகள் 
 
நினைத்ததும் போய் 
விடலாம்தான் 
நினைத்ததும் வளைக்க 
முடியாத 
நாற்பது கொண்டை
ஊசி வளைவுகளுக்கு அப்பால் 
இருக்கும் சொப்பனபுரி அது 
 
கோவைக்கும் 
வால்பாறைக்குமிடையே 
120 கி மீ தான் என்று 
யாராவது கூறினால் 
அவர்களுக்கு திரும்ப 
கூறுகிறேன் 
 
நூற்றி இருபது கிலோ 
மீட்டர்களும் 
இருபத்தி எட்டு வருடங்களும்...!
 
- கவிஜி
Pin It