இரு உன்னை கடவுள்கிட்டயே சொல்றேன்
என்று சாகும் தருவாயிலும் சொன்ன
சிரியா சிறுவனைப் பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கிறாள் ஆசிஃபா
அருகிலிருந்தும் அடைக்கலம் கேட்டும்
காப்பாற்ற வரமாட்டார் கடவுள் என்பது
அவளுக்கு மட்டுமே தெரியும்
துப்பாக்கி குண்டு துளைத்து
சுட்டவுடன் செத்துப் போன
சிரியாவின் குழந்தைகளின்
உடல்களைப் பார்த்து ஏக்கமாய்
புன்னகைக்கிறாள் ஆசிஃபா
அம்மா என்று அலறியிருப்பாளோ
தெய்வம் வந்து காப்பாற்றும்
என்று நம்பியிருப்பாளோ
பெயரைக் கேட்ட தெய்வம்
ஓடி ஒளிந்திருக்குமோ கருவறைக்குள்
ஆபாசப் படம் பார்க்க
ஆசைப்பட்டார் போலும் கடவுள்
படையல் வைத்திருக்கிறார்கள் பக்தர்கள்
இரவெலலாம் கனவுகளில்
வந்து போகிறாள் ஆசிஃபா
முக்காடிடவும், முழங்காலிடவும்,
கன்னத்தில் போட்டுக் கொள்ளவும்
அருவருப்பாய் உணர்கிறது உடல்
ஊதுபத்தியிலும், கற்பூரத்திலும்,
மெழுகுவத்தியிலும்மணக்கிறது
ஆசிஃபாவின் குருதி வாசனை
மந்திரங்களில் ஒலிக்கிறது
அவளது அலறல்
பிரசாதமாய்க் கிடக்கிறது
அவளது உடல்