என்னை தேடாதே!
எங்கும் தொலையவில்லை!
வெயில் கண்டு ஒதுங்கி
நிற்கிறேன்!

வெயில்
அதி வேகமாய்
மேனியெங்கும்
படர்கிறது!

வெயில்
விரோதியைப் போல்
என் மீது
குரோதங் கொள்கிறது!

வெயில்
தீ தின்னும்
காகிதம் போல்
கருகச் செய்கிறது!

வெயில்
அடை மீது அமரும்
கோழியைப் போல்
என் மீது அமர்கிறது!

வெயில்
நேசத்தை நினைவு படுத்தாது
துரோகத்தின் கணங்களையே
கைப்பிடித்து வருகிறது!

வெயில்
முத்தத்திற்காகவோ
அணைப்பிற்காகவோ
காத்திருப்பதேயில்லை!

என்னை தேடாதே
எங்கும் தொலையவில்லை!
வெயில் கண்டு
இப்போது ஒளிந்திருக்கிறேன்!

- இசைமலர்