காவிரியில தண்ணி இல்ல
கழனியில வெளச்சலும் இல்ல
வரப்ப வெட்டி எலியப் புடிச்சி
வயிற வளக்குறோம்.

குருணையில கூழு காய்ச்சி
மூனு நாளா அரை தம்ளர்ன்னு
குடும்பமே குடிச்சு வாழுறோம்.

சர்க்காரு காரு வந்து
சரபுரன்னு வயலுல இறங்கி நிக்க
இடுப்பு வேட்டிய இறுக்கிப் புடிச்சி
ஏஞ்சாமி என்னாச்சுன்னு
எழுந்து நிக்கிறோம்.

மீத்தேன் எடுக்கப் போறோம்
வயலுல எறங்கக் கூடாது
ஓரங்கட்டுங்கன்னு ஒதுக்கித் தள்ள
இடிஞ்சி உக்காந்துருக்கோம்.

செவப்பு வேட்டிக் கட்டி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு வேண்டுதல்
உப்பு, மொளகா, புளி
கொண்டா காணிக்கை.

மூணு அமாவாசைக்குத் தொடர்ந்து
அய்யா பாதத்த பூசச்செஞ்சு
கழுவிக் குடிச்சா
எல்லாஞ் சரியாப் போகுமுன்னு
சொல்லி நிக்கிறானே
எதக் கொண்டு அடிக்க?

- சிவ.விஜயபாரதி

Pin It