தூரத்துச் சதுரங்களின்
நிழல்கள் ஆழப்பதிந்திருந்த
கருவிழி ஓரம்
கண்ணாடி இமைகளின்
ஈரச் சிதறல்கள்
தீண்டிச் சென்ற சிறு
மென்மையின் ஸ்பரிசங்கள் ,
ஒரு நொடியில்
படர்ந்த வெண்மைக்குள்
மிச்சமிருந்த வெளிச்சக்கீற்று
விட்டுச்சென்ற
நட்சத்திரத் தூறலின் சிறகசைப்புக்குள்
இன்னும் மீதமிருக்கிறது..

வெட்டுப்பட்ட சிறகொன்று
தன் கடைசித் துளியை
விட்டுச்சென்ற பொழுதொன்றில்
தேக்கி வைத்திருந்த
நீருக்குள் மிதந்துகொண்டிருந்த
சலனத்தின் துளி
விரல்நுனி தீபமொன்று
படரவிட்டிருந்த புகை மூட்டத்துக்குள்
புகையும் வெப்பக்குவியலென
அலைந்து கொண்டிருக்கிறது..

கருப்புத் திரையிட்டுக்கொண்டு
கண்களுக்குப் புலப்படாதவாறு
ஒளிந்து கொண்டிருந்த
விடுபட்டுப்போன காலம்
கொஞ்சம் கீழிருந்து மேலாய்
நகர்ந்து செல்லச் செல்ல
மூன்றாம் முறையாய்த்
தன் உருவத்தை
மாற்றிக்கொண்டு நகர்ந்தது..

துருவின் நிறத்திலொரு
கூண்டுக்குள் அடர்ந்திருந்த
கூழாங்கல் வனத்தின் நடுவே
என்றோ ஒரு கூர்முனை
கீரிச் சென்ற கோடொன்றினை
ஓவியமென தீட்டிக்கொண்டிருந்த
கடைசிக்குரல் .. இன்றும்
கூழாங்கல் வனத்தினூடே
ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது..

தன்னைச்சுற்றிச் சூழ்ந்திருந்த
நிழல்களின் தீண்டல்களும்
பிம்பங்களின் வர்ணங்களும்
கொஞ்சம் கொஞ்சமாய்
சிதறி மறைந்துபோய்க்கொண்டிருக்க..
நீரின் மூச்சுக்குள்ளிருந்து
எட்டிப் பார்த்த
கடைசி நிழலின் வர்ணம்
உள்ளங்கைக்குள் உடைந்துபோன
குமிழியோடு மறைந்துபோனது..

- கிருத்திகா தாஸ்