உன் மீதான
ப்ரியமென்பது
ஊமைப்பெண்ணொருத்தியின்
சைகை மொழியைப்
போன்று நுட்பமானது!

உன் மீதான
ப்ரியமென்பது
வெகுநாட்களுக்குப் பின்
வீடு திரும்பும் பிள்ளையை
உச்சி நுகர்தலைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
நீண்ட நேரத்து
கோபத்திற்குப் பின்
நெகிழ்ந்து வரும்
முதல் சொல்லைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
முதல் பிரசவத்திற்கு
தன் வீடு போக காத்திருக்கும் மனைவியின் சூல் வயிற்றில்
முத்தமிட்டு விடைதருதலைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
முதன்முதலாய்
சந்தித்த தருணத்தில்
பேச விரும்பிய சொல்லை
பேசாது திரும்பிய
பொழுதைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
வறண்ட நிலத்து
மண்ணில் வீழ்ந்த
முதல் ஒற்றைமழைத்துளியைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
களைத்தப் பொழுதொன்றில்
உதடு குவித்து நீ
ஊதுகிற உயிர்க்காற்றைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
உன்னைப் பற்றி
பிறபெண்கள்
பேசுகையில்
கண்களில் உருவாகும்
கனலைப் போன்றது!

உன் மீதான
ப்ரியமென்பது
விடைகொடுத்து
அனுப்புகையில்
இன்னுமொருமுறை
திரும்பிப் பார்த்திடு
என மனதிற்குள்
ஏங்குதலைப் போன்றது

- இசைமலர்