குருதி உறைந்த வேதனை
அவள் கண்களில் வழிகிறது
பாலைவனத்தையொத்த அகநிலை விழுமியங்கள்
அவளது தேகத்தில் பட்டுத் தெறிக்கிறது
சொல்லொண்ணாத் துயரங்களை
தூக்கிச் சுமக்கிறதவள் வெளிரோடைகள்…
ஆணாதிக்க பொதுப்புத்தியேந்தி
குடும்பச் சிறைபூட்டி கொடுமைகள் பல செய்தாலும்
கணவனை சிறிதும் கடிந்துகொள்ளாதவள்…
அடிமைத்தீயில் எரிந்தபோதும்
அழுதுபுலம்பி அல்லோலப்பட்டு தலைவிரிகோலமாய்
நிலைகுலைந்து மூர்ச்சையாகி வீழ்ந்தாலும்
குழந்தையைப் பார்த்தே குணமடைந்து போகிறவள்…
கணவனின் மரணம்
பொட்டு, பூவை அழித்து
கட்டிய தாலியை அறுத்தெறிந்து
விதவையெனப் பெயரிட்டது
அவளோ புதியதொரு
தனித்துவத்தை கையிலேந்தி
கம்பீர நடைநடந்து செல்கிறாள்
மனுசி எனும் அடையாளத்தோடு……
இதுவரையில்லாத தன்னம்பிக்கையை
தட்டுத்தடுமாறி முற்றும் கற்றுத்தெளிந்தவளாய்
தன்னிடமிருக்கும் தைரியத்தை
தாரைவார்த்துக் கொடுக்கிறாள் பிள்ளைகளுக்கும்…
பெண் எனும் அடையாளத்தை
பிழிந்தெடுக்க புடைசூழ தலைதூக்கி
நிற்கிறதவளின் உறவுக்குறிகள்
அண்ணன் தம்பியென்றும் உறவுக்காரனென்றும்…
உரிமைகளின் கொட்டத்தை உடைத்தெறிந்து
மீண்டெழும் அவளுள் வெட்டப்படாத
பெரும்பள்ளங்கள்...

- வழக்கறிஞர் நீதிமலர்