man 241பரந்த வெளிப்பரப்பின்
தத்ரூபங்களை
அழித்துக் கொண்டே
வருவதாக
நம்புகிறது என் பாதை...

எங்கிருந்தோ பொத்துக் கொண்டு
வந்து விடும் சப்தங்களை
யாரோவாக்கி அலைய விடுகிறது
மரித்தவளிடம் சென்று சேராத
என் அலை...

வட்டமிடும் இருத்தலின்
சில்லிட்ட ஞாபகம்
பாலைவனம் கைவிட்ட
தாகமென
எனதெங்கும் முளைக்கிறது...

திடும்மென முளைத்து
சரசரவென உருவாகி விடும்
வீதி ஓவியத்தின்
இரவுத் தனிமையென யாரோவுடன்
நானும்...

மாலையுமற்ற இரவுமற்ற
இடைவெளியில் பழுத்து விழ
தீர்மானித்த இலையுடன் சரசரத்து
இன்னும் பட படக்கிறது
என் கனவின் நுனி...

தலைக்குள்ளிருந்து கிரீச்சிட்டு
பறந்து செல்லும்
வானத்திற்கு சற்று நேரம்
இப்படித்தான் என் மூளை....

- கவிஜி